ஆதரவாளர்களைத் திரட்டும் அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர்

2 mins read
0120e6a8-4889-4282-926c-50213e88cd23
ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற அரசியல் பேரணியில் திரு டிம் வோல்ஸ் உரையாற்றினார்.  - படம்: இபிஏ

சிகாகோ: ஜனநாயகக் கட்சியின் அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் டிம் வோல்ஸ், தாமும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசும் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்பை வெற்றி காண்பார்கள் என்று உறுதிகூறியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற அரசியல் பேரணியில் அவர் உரையாற்றினார்.

மினசோட்டா ஆளுநரான அவர், அத்தகைய பெரிய அளவிலான உரையை தான் இதுவரை நிகழ்த்தியதில்லை என்பதைக் குறிப்பிட்டார். இருப்பினும், உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் காற்பந்துப் பயிற்றுவிப்பாளராகத் தாம் பல ஊக்க உரைகளை ஆற்றியிருப்பதாக அவர் சொன்னார்.

அதற்கு, அங்குத் திரண்டிருந்தவர்கள் “பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர், பயிற்றுவிப்பாளர்!” என்று முழக்கமிட்டனர்.

திரு வோல்ஸ் தமது பேரணி உரையில் தமது சிறுநகரப் பண்புகளையும் வெளிப்படையான பேச்சையும் முன்வைத்தார்.

சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அரசியல்வாதிகளும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.

துணை அதிபர் வேட்பாளருக்கான தமது கட்சியின் நியமனத்தை திரு வோல்ஸ், 60, ஏற்றுக்கொண்டார்.

பிள்ளைகள் பட்டினியில்லாமல், சுகாதாரப் பராமரிப்பும், வீடமைப்பும் மனித உரிமைகளாக இருக்கவேண்டிய ஓர் இடமாக அமெரிக்கா திகழவேண்டும் என்றார் அவர்.

மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிடும் 78 வயது டிரம்பால் வழிநடத்தப்படும் வெள்ளை மாளிகை, செல்வந்தர்களைத் தவிர வேறு யாருக்கும் சேவை அளிக்காது என்று திரு வோல்ஸ் கூறினார்.

இந்நிலையில், திருவாட்டி ஹாரிஸ், 59, ஆகஸ்ட் 22ஆம் தேதி இரவுக் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறார்.

பிரபல கலைஞர் ஓப்ரா வின்ஃப்ரீ, முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுடன் சேர்ந்து திருவாட்டி ஹாரிசுக்குத் தமது ஆதரவைத் தெரிவித்தார்.

திருவாட்டி வின்ஃப்ரீ மேடையேறியதும் பேராளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.

அதிபர் ஜோ பைடன் வரும் நவம்பர் மாதத் தேர்தலிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சென்ற ஜூலை மாதம் துணை அதிபர் ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவர் 15 நாள்களுக்கு முன்னர்தான் அதிக பிரபலம் இல்லாத திரு வோல்ஸை தேசிய அளவிலான மேடையில் அறிமுகப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்