காஸா பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க அப்பாஸ் வலியுறுத்து

1 mins read
aa827299-d9be-4c73-b649-92c9174fcd0c
பாலஸ்தீன அதிபர் அப்பாஸ். - படம்: ஏஎஃப்பி

காஸா: பாலஸ்தீன அதிபர் முஹமட் அப்பாஸ், அனைத்துப் பிணைக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல், அதை ஒரு காரணமாக வைத்து காஸா மீது தாக்குதல் நடத்தி வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல், அண்மையில் காஸா மீது நடத்திய தாக்குதலில் குறைந்தது 25 பேர் மாண்டனர்.

இந்நிலையில் ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உதவிப் பொருள்களை வழங்குவதற்கு இஸ்ரேல் போட்டுள்ள முட்டுக்கட்டையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை மார்ச் 18ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. பிணைக்கைதிகளை விடுவிப்பதும் நிறுத்தப்பட்டன. ஏறக்குறைய 1,800 பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக 33 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

சண்டை நிறுத்தத்திற்கான புதிய பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன. இதற்கிடையே கெய்ரோ, எகிப்தில் உள்ள ஹமாஸ் பேராளர்கள், எகிப்திய, கத்தார் சமரசப் பேச்சாளர்களுடன் சண்டையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையைப் புதுப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“இஸ்ரேலின் தாக்குதலுக்கு நாங்கள்தான் விலை கொடுக்கிறோம். மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இஸ்ரேல் அல்ல. என்னுடைய சகோதரரே பிணைக் கைதிகளை ஒப்படைக்கவும்,” என்று திரு அப்பாஸ் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே அப்பாஸின் கருத்து அவமானப்படுத்துவது போல் உள்ளதாக மூத்த ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஆக்கிரமிப்புக் குற்றங்களுக்கும் அதன் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கும் திரு அப்பாஸ் மீண்டும் மீண்டும் சந்தேகமான முறையில் பழியை நம் மக்கள் மீது சுமத்துகிறார்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்