லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள சாட்ஸ்வொர்த் பகுதியில், என்பிசி செய்தி நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) விபத்துக்குள்ளானது. அதில் மூவர் உயிரிழந்தனர்.
பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நடந்தது.
வணிகக் கட்டடம் ஒன்றின் அருகே விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் உடனடியாகத் தீப்பற்றி எரிந்தது.
அச்சம்பவத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் லாஸ் ஏஞ்சலிஸ் தீயணைப்புத் துறை செப்டம்பர் 16ஆம் தேதி தெரிவித்தது.
பலியானவர்களில் ஒருவர் வணிகக் கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது; மற்ற இருவர் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
அவ்விபத்து குறித்து அமெரிக்கத் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியமும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூசமும் லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் கேரன் பாசும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
