சிங்கப்பூரில் கடத்தப்பட்ட மாணவி குவாந்தானில் மீட்பு

2 mins read
22b3ef30-731d-4050-a3be-c194a0148d07
ஜோகூர் மாநில காவல்துறை தலைவர் எம். குமார்.  - படம்: மலேசிய ஊடகம்

ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து கடத்தப்பட்ட சீன நாட்டு பதின்ம வயது பெண்ணைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஜோகூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

தனது 15 வயது மகள் பள்ளிக்கு வரவில்லை என்றும், அடையாளம் தெரியாதவரால் கடத்தப்பட்டுள்ளார் என்று நம்பப்படுவதாகவும் 48 வயது சீன நாட்டவர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) ஜோகூர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாநில காவல்துறை தலைவர் எம். குமார் கூறினார்.

“காணாமல் போனதாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு அந்த மாணவி திங்கட்கிழமை (நவம்பர் 25) சிங்கப்பூரில் உள்ள தனது பள்ளிக்குச் செல்லவில்லை. உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) மலேசியாவுக்கு அவர் கொண்டு வரப்பட்டது சோதனைகளில் கண்டறியப்பட்டது.

“உளவுத் தகவல் சேகரிப்பின் மூலம், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) பஹாங், குவாந்தானில் உள்ள ஒரு பகுதியில்சோதனை நடத்திய காவல்துறை அம்மாணவியை மீட்டனர். அதே இடத்தில் 22 வயது சீன நாட்டவரும் கைது செய்யப்பட்டார்,” என்று புதன்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் ஏழு நாட்கள் டிசம்பர் 2ஆம் தேதி வரை விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவார் என்று அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 (சட்டம் 792),பிரிவு 14ஏ, சிறார் சட்டம் 2001 (சட்டம் 611) பிரிவு 48 (2) தண்டனைச் சட்டத் தொகுப்பு (சட்டம் 574) பிரிவு 361 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் திரு குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்