மெல்பர்ன்: காற்சட்டைப் பையில் வைத்திருந்த மின்தேக்கி (power bank) தீப்பற்றி எரிந்ததால் ஆடவர் ஒருவருக்குக் காலிலும் கைவிரல்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் விமான நிலையத்தில் வியாழக்கிழமையன்று (நவம்பர் 6) குவான்டாஸ் பயணிகளுக்கான ஓய்வுக்கூடத்தில் காத்திருந்தபோது இவ்விபத்து நேர்ந்தது.
காற்சட்டைப் பைக்குள் இருந்த அந்த மின்தேக்கி அதிகச் சூடாகிவிட்டதுபோல் தெரிந்தது என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ‘தி ஏஜ்’ செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.
மின்தேக்கி பற்றி எரிந்ததால் ஓய்வறையில் கடுமையான நெடி பரவியது. அதனால், 150க்கும் மேற்பட்டோர் அவ்விடத்தைவிட்டு வெளியேற நேரிட்டது.
பாதிக்கப்பட்டவர் 50களில் இருந்த ஆடவர் என்றும் துணை மருத்துவப் படையினர் வருமுன்னர் ஓய்வுக்கூட ஊழியர்கள் அவரை நீராட வைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பின்னர் சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டார் என்றும் கூறப்பட்டது.
மின்தேக்கியிலிருந்த அமிலம் சுற்றிலும் தெறித்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சொன்னார்.
சம்பவத்தை உறுதிப்படுத்திய குவான்டாஸ் பேச்சாளர், பின்னர் அந்த ஓய்வுக்கூடத்தில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, கையடக்க மின்தேக்கி உள்ளிட்ட லித்தியம் மின்கலங்களைப் பயணிகள் எடுத்துச் செல்வது தொடர்பான தனது கொள்கையை குவான்டாஸ் நிறுவனம் மறுஆய்வு செய்துவருகிறது.
அண்மையில் விமானத்துறை சார்ந்த பல தீ விபத்துகளுக்கு மின்தேக்கிகள் காரணமாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரியில் தென்கொரியாவில் பயணிகள் விமானம் ஒன்று தீக்கிரையானதற்கு மின்தேக்கியே காரணம் என நம்பப்படுகிறது.
எமிரேட்ஸ், கேத்தே பசிபிக், சைனா ஏர்லைன்ஸ், கொரியன் ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமானப் பயணத்தின்போது மின்தேக்கிக்கு மின்னூட்டம் செய்வதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன.

