துவாஸ் இரண்டாம் பாலத்திற்கு அருகே இம்மாதம் ஒன்பதாம் தேதியன்று சட்டவிரோதமாக யூ-டர்ன் செய்ததால் மோட்டார் சைக்கிளோட்டி இறக்கக் காரணமாக இருந்ததாக சிங்கப்பூர் ஓட்டுநர்மீது மலேசிய நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (மே 15) அவர்மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சந்தேக நபரான முகம்மது இர்சியாத் அப்துல் ஹமீது, 27, ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்ததாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
முகம்மது இர்சியாத், மசெராட்டி (Maserati) காரை அபாயகரமான முறையில் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் காரணமாக மே ஒன்பதாம் தேதி மாலை 32 வயது ஏ. வசந்த்ராஜ் உயிரிழந்தார் என்று நம்பப்படுகிறது.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, சட்டப் பிரிவு 41(1)இன்கீழ் முகம்மது இர்சியாத்மீது கவனமின்றி அல்லது அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், முகம்மது இர்சியாத்துக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுச் சிறைத் தண்டனையும் 50,000 ரிங்கிட் (15,153 வெள்ளி) அபராதமும் விதிக்கப்படலாம். வழக்கறிஞர்கள் பஹருதீன் பாஹ்ரிம், ஸரினா இஸ்மாயில் டாம் ஆகியோர் அவரைப் பிரதிநிதிக்கின்றனர்.