மலாக்கா: சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த 13 வயதுச் சிறுமி ஒருவர், மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
மலாக்கா மாநிலம், ஜாசின் மாவட்டத்தில் பன்னோக்கு வாகனத்தில் (MPV) பயணம் செய்தபோது அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட அவர், எதிர்த்திசையில் சாலையில் விழுந்தார்.
இந்த விபத்து குறித்து காலை 7.54 மணிக்குக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. ஐரிஸ் சோஃபியா முகம்மது சித்திக் கான் என அச்சிறுமியை அடையாளப்படுத்திய ஜாசின் சூப்பரின்டென்டென்ட் முகம்மது ருஸ்லி மாட், விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாகச் சொன்னார்.
கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த அந்த வாகனத்தின் முன்புற வலது சக்கரம் (tyre) வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“வாகனத்தை ஓட்டிய 36 வயது நபர் அதன் கட்டுப்பாட்டை இழந்தார். விரைவுச்சாலைத் தடுப்பின்மீது அந்த வாகனம் மோதியது. இதன் தாக்கத்தால் அச்சிறுமி வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில், சாலையின் எதிர்த்திசையில் விழுந்தார். அவர்மீது அவ்வழியாகச் சென்ற வேறொரு கார் மோதியது,” என்று சூப்பரின்டென்டென்ட் முகம்மது ருஸ்லி தெரிவித்தார்.
அந்தப் பன்னோக்கு வாகனத்தில் நான்கு வயதுக்கும் 63 வயதுக்கும் இடைப்பட்ட ஒன்பது பயணிகள் இருந்ததாக அவர் கூறினார்.
“இறந்த சிறுமியின் 10 வயது சகோதரிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. இதர பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் இதில் காயமடையவில்லை,” என்றார் அவர்.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987, சட்டப்பிரிவு 41(1)ன்கீழ் இந்த விபத்து குறித்து விசாரிக்கப்படுவதாக சூப்பரின்டென்டென்ட் முகம்மது ருஸ்லி சொன்னார்.