கின்னஸ் சாதனை படைத்துள்ள 150 வயது கிறிஸ்துமஸ் மரம்

1 mins read
63ff4a01-8aaa-446e-8a9d-8627c55c65d1
மூன்று பேர், இரண்டு நாள்களில் மரத்திற்கான விளக்குச்சரங்களைப் பொருத்தினர். - படம்: நார்த்தம்பர்லாந்து 250 ஃபேஸ்புக் பக்கம்

லண்டன்: இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாந்து பகுதியைச் சேர்ந்த 150 வயது கிறிஸ்துமஸ் மரத்திற்குக் கின்னஸ் உலகச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

44.7 மீட்டர் உயரமுள்ள இந்த மரம், ‘ஏஞ்சல்ஸ் அஃப் தி நார்த்’ மரத்தைக் காட்டிலும் ஏறத்தாழ இரண்டு மடங்கு உயரம் உள்ளது.

1,320 மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது இந்தக் கிறிஸ்துமஸ் மரம். கடந்த ஆண்டு இது முதன்முறையாக அலங்கரிக்கப்பட்டது. 

செம்மரத்தால் உருவாக்கப்பட்ட இம்மரத்தை அலங்கரிப்பதற்கு 51 மீட்டர் உயரமான பாரந்தூக்கி இதற்குத் தேவைப்பட்டது.

தற்கால மரபில் மின்விளக்குகள் மரத்தைச் சுற்றி வளைத்துப் பொருத்தப்படும். ஆனால் 19ஆம் நூற்றாண்டின்போது இந்த விளக்குகள் செங்குத்தாகப் பொருத்தப்பட்ன. 

மூன்று பேர், இரண்டு நாள்களில் மரத்திற்கான விளக்குச்சரங்களைப் பொருத்தினர்.

1860களில் வில்லியம் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரால் நடப்பட்ட இந்த மரம், கிரேக்சைட் கிராமத்திற்குப் பேரழகைச் சேர்க்கிறது.

இந்த மரத்துடன் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் மரங்களும் புதர்களும் அக்காலத்தில் நடப்பட்டன.

மறுமின்னூட்டம் செய்யக்கூடிய மின்கலன்கள் இந்த மரத்தின் விளக்குகளுக்கு ஒளியூட்டுகின்றன.

சுற்றியுள்ள வனவிலங்குகளுக்குத் தொல்லை தராத விதமாக அந்த விளக்குகள் மாலை 5 மணி வரையில் ஒளிரவிடப்பட்டுள்ளன.

சுற்றுப்புறப் பாதுகாப்புக்கான நினைவூட்டலாகவும் இந்த மரம் திகழ்வதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்புச் சொற்கள்