ஏர்இந்தியா சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்திய ஊழியர்கள்மீது நடவடிக்கை

ஏர்இந்தியா சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்திய ஊழியர்கள்மீது நடவடிக்கை

நிர்வாகத்தின் பல நிலைகளில் இந்தத் தவறுகள் நடந்துள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 of 2
படம்: ராய்ட்டர்ஸ்
படம்: அஷுடோஷ் திவாரி

15 Mar 2026 - 7:18 pm

1 mins read

புதுடெல்லி: ஏர்இந்தியா விமான நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் கடந்த நிதி ஆண்டில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

ஏறத்தாழ 4,000 ஊழியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘பொழுதுபோக்குப் பயணச் சலுகைகளை’ முறைகேடாகப் பயன்படுத்தியதால், அவற்றால் ஏற்பட்ட இழப்புகளை மீட்க நிறுவனம் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதோடு ஊழியர் சலுகைகள் குறித்த அதன் சட்டதிட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றன.

இந்த விவரங்களை ‘இகனாமிக்ஸ் டைம்ஸ்’ ஊடகம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) வெளியிட்டுள்ளது.

தொடர் இழப்பில் செயல்பட்ட ஏர்இந்தியா நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டுமுதல் டாட்டா நிறுவனத்தால் ஏற்று நடத்தப்பட்டு வருகிறது. பல சீரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் அந்நிறுவனத்தில் 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அந்த நிறுவனத்தில் நடந்த ஆழமான உள்நிர்வாக விசாரணையில் அதன் ஊழியர் சலுகைத் திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் வெளிவந்துள்ளன. உறவினர் அல்லாதோரும் ஊழியர்களுக்கு வேண்டப்பட்டவர் என்ற பெயரில் இலவச விமானப் பயணங்கள் செய்தது, விமானப் பயணச் சீட்டை ஊழியர் அல்லாதோரிடம் விற்பது போன்ற பல குறைபாடுகள் விசாரணையில் கண்டறியப்பட்டன.

நடந்துள்ள மொத்த முறைகேடுகள், சம்பந்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை போன்ற பல கேள்விகளுக்கு நிறுவனத்திடம் இருந்து எவ்வித கருத்தும் வெளியிடப்படவில்லை.

நிர்வாகத்தின் பல நிலைகளில் இந்தத் தவறுகள் நடந்துள்ளதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஏர் இந்தியாநிர்வாகம்குறைபாடுமுறைகேடுகுற்றம்சலுகைஊழியர்