ஜோகூர்பாரு: சாதாரண மக்களுக்கான மலிவு வீடுகள் (RMMJ) கட்டுவதைத் தாமதப்படுத்தும் மேம்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட குத்தகைகள் ரத்து செய்யப்படும்.
அந்த எச்சரிக்கையை மலேசிய அரசாங்கத்தின் ஜோகூர் வீடமைப்பு மன்றத் தலைவர் முகம்மது ஜப்ஃனி முகம்மது ஷுக்கோர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) விடுத்தார்.
திறந்த வெளிச்சந்தையில் மற்ற விலைமதிப்புள்ள வீடுகளைக் கட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி, மலிவு வீடுகள் கட்டிமுடிக்கப்படவேண்டிய காலக்கெடுவை அலட்சியப் படுத்தும் மேம்பாட்டாளர்களைச் சாடும் வகையில் அவரின் கருத்துகள் அமைந்தன.
வீடமைப்பு வரைவுத்திட்டம், மதிப்பீடு, வடிவமைப்பு குழுவின் மூன்றாம் கூட்டத்தை அன்றைய தினம் அவர் தலைமையேற்று வழிநடத்தினார்.
அதில் மாநில வீடமைப்பு மேம்பாட்டு கூட்டமைப்பு (PDRC), மாநில ஆட்சியின் செயலாளர் அலுவலகம், நிலங்கள் சுரங்க அலுவலகம் ஆகியவற்றுடன் உள்ளுர் அரசாங்க முகவைகளும் இதர அமைப்புகளும் பங்கேற்றன.
பிடிஆர்சி அமைப்பு இதுவரை 37 கூட்டங்களை நடத்தியுள்ளது. அது 10 மாவட்டங்கள், 17 உள்ளூர் ஆட்சி அமைப்புகள், 152 வீட்டு மேம்பாட்டாளர்கள் ஆகியவற்றுடன் 190 வீடமைப்புத் திட்டங்களை உள்ளடக்கியதாகும். அதன்படி மொத்தமாக அவற்றில் 45, 575 வீடுகள் 2030ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டம், ஜோகூர் பாரு, குலாய், மெர்சிங் ஆகிய பகுதிகளில் உள்ள வீடமைப்புத் திட்டங்களை மறுஆய்வு செய்தது. வரைபட மாற்றங்கள், இடமாற்றம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் வாய்ப்பு, மலிவு வீடுகள் திட்டத்துக்கு உடன்படும் நடைமுறை ஆகியவை ஆய்வுக்கு உட்பட்டன.
மாநில மக்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் மலிவு வீடமைப்புத் திட்டங்களை மேம்பாட்டாளர்கள் விரைந்து முடித்து மக்களிடம் ஒப்படைப்பதை உறுதி செய்யவே ஒப்பந்த ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக திரு முகம்மது ஜப்ஃனி அக்கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் குறிப்பாகக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்க் குடும்பங்களின் சொந்த வீடுகளைக் கட்டி அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே மாநில அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். எனவே, மலிவு வீடுகளைக் கட்டுவதில் எவ்விதக் கவனக்குறைவோ தாமதமோ பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் தெளிவாகத் தெரிவித்தார்.
அடிப்படை வாழ்விடங்களுடன் பல சிறந்த வசதிகள் மலிவு வீட்டுத் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. எனவே ஆர்எம்எம்ஜே திட்டம் வெறும் மேம்பாட்டுத் திட்ட எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக மட்டும் செயல்படுத்தப்படவில்லை. மக்கள் அரசாங்கத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றவேண்டிய கடமையும் அதில் உள்ளடங்கியது எனவும் அவர் குறிப்பிட்டார்.


