சிறார் கொடுமையில் சிக்கிய நிறுவனம் மீதான நடவடிக்கை தீவிரமடைகிறது

1 mins read
98ae68b2-01f1-4e6a-8401-b69b15470279
சிறார் கொடுமை சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் (GISBH) நிறுவனம். - கோப்புப் படம்: ஊடகம்

கோலாலம்பூர்: சிறார் கொடுமை சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் (GISBH) நிறுவனம் மீதான நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.

அந்த அமைப்பு பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து சாபாவிலும் சரவாக்கிலும் அதன் வளாகங்களில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் கூறின.

அந்த வளாகங்கள் இயங்கவில்லை என்றபோதிலும் குற்றத்தில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

அந்த இரு மாநிலங்களிலும் தேடுதல் வேட்டைக்குத் தயாராகி வருவதாக தலைமைக் காவல்துறை அதிகாரி ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்து உள்ளார்.

தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையில், அந்த அமைப்பின் 12 கிளை நிறுவனங்கள் வருடாந்தர அறிக்கையையும் தணிக்கை செய்யப்பட்ட நிதிக் கணக்குகளையும் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அந்தக் குற்றங்களுக்காக அந்நிறுவனங்களுக்கு 4.4 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக உள்நாட்டு வர்த்தக அமைச்சர் அர்மிஸன் முகம்மது அலி கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள குளோபல் இக்வான் நிறுவனம் தொடர்புடைய எழுவருக்கும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) முதல் ஒருவார காலத்துக்கு விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அனுமதியை காவல்துறை பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்