கோலாலம்பூரில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதலுக்கு எதிராக நடவடிக்கை

1 mins read
ced2897c-0954-4da9-9c8b-9709471afbd2
2026, மலேசியாவுக்கு வருகை தரும் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: ஜனவரி 1ஆம் தேதி முதல், கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்காக அல்லது எச்சில் துப்புவதற்காகப் பிடிபட்டால், ஆறு மாதங்களுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலான சமூக சேவையைச் செய்வதோடு, கூடுதலாக 2,000 ரிங்கிட் (S$630) வரை அபராதம் விதிக்கப்படும் என்று கோலாலம்பூர் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

மலேசியாவுக்கு வருகை 2026 பிரசாரத்துடன் இணைந்து, கோலாலம்பூர் முழுவதும் குப்பை கொட்டுதல் மற்றும் எச்சில் துப்புதலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை கோலாலம்பூர் நகர மன்றம் துரிதப்படுத்தும் என்று சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் நோர் ஹலிசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சுற்றுப்பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் சிகரெட் துண்டுகள், பானப் போத்தல்கள் போன்ற சிறிய குப்பைகளை வீசுவதையும், நடைபாதைகளில் எச்சில் துப்புவதையும் இந்த நடவடிக்கைகள் கவனம் செலுத்தி தடுக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நடைமுறை சுற்றுப்புறங்களை அசுத்தமாக்குவது மட்டுமல்லாமல், நாட்டின் நற்பெயரையும் கெடுக்கிறது என்று அவர் கூறினார்.

“தண்டனை வழங்குவது மட்டும் எங்கள் நோக்கமல்ல. பொதுமக்களுக்கு அதிக ஒழுக்கத்தைக் கற்பிக்கவும், அமைக்கப்பட்ட பொது இடங்களை மதிக்கவும் அறிவுறுத்துவதே எங்கள் நோக்கம்,” என்றும் நோர் ஹலிசாம் தெரிவித்தார்.

தூய்மையான மற்றும் ஒழுங்குமுறையான நகரத்தின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்த, ஜாலான் புக்கிட் பிந்தாங், டட்தாரான் மெர்டேக்கா, ஜாலான் துன் பேரா, பிரிக்ஃபீல்ட்ஸ் வணிகப் பகுதியை உள்ளடக்கிய நான்கு குப்பைகள் இல்லாத மண்டலங்களையும் கோலாலம்பூர் நகர மன்றம் நியமித்துள்ளதாக டாக்டர் நோர் ஹலிசம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்