பாரிஸ்: பிரான்சில் தொடரும் தீவைப்புக் குற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரோன் அதனைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக வியாழக்கிழமை (ஜூலை 16) உறுதி அளித்தார்.
தலைநகர் பாரிஸ் அருகிலுள்ள வனப்பகுதி உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க காடுகளில் வேண்டுமென்றே தீவைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அதிபரின் அறைகூவல் வெளிவந்துள்ளது.
நாடுதழுவிய நிலையில் பலர் தீவைப்புக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் தவறுதலாகவோ வேண்டுமென்றோ அச்செயல்களைப் புரிந்துள்ளனர். ஏற்கெனவே மே மாதம் முதல் பிரான்சில் வெப்ப அலை வீசிவரும் வேளையில் வறண்ட பகுதிகளில் தீச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதுவரையில் ஏறத்தாழ 35,000 ஹெக்டர் பரப்பளவு நிலம் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அது 2025ஆம் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த தீச்சம்பவங்களின் அளவை மிஞ்சிவிட்டது.
“இரண்டாம் உலகப் போர் காலத்துக்குப் பிறகு, இந்த அளவு தீச் சம்பவங்களைப் பிரான்ஸ் எதிர்கொண்டதில்லை,” என்று அதிபர் மெக்ரோன் கவலை தெரிவித்தார். பாரிஸ் அருகில் உள்ள ‘ஃபொன்டென்பிலூ’ காட்டுப் பகுதியை ஜூலை 5 அன்று பார்வையிட்டபோது அவர் அக்கருத்தைத் தெரிவித்தார்.
தலைநகரிலிருந்து 60 கிலோமீட்டர் தென்கிழக்கில் உள்ள அக்காட்டின் 2,000 ஹெக்டர் பகுதி தீக்கிரையாகிவிட்டது. அங்கிருந்த 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பாதுகாப்பு கருதி மாற்று இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

