தாதியர்க்கு கடும் பற்றாக்குறை: பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்கும் மலேசியா

தாதியர்க்கு கடும் பற்றாக்குறை: பயிற்சி நிலையங்களை மீண்டும் திறக்கும் மலேசியா

2 mins read
6c069f8c-275a-4e7d-b0d9-535eae69adfc
மலேசியாவில் நிலவும் கடும் தாதியர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடிப் பணி நியமனம் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: மலாய் மெயில்
Google News Preferred Icon

கோத்தா கினபாலு:  மலேசியாவில் நிலவும் கடுமையான தாதியர்  பற்றாக்குறையைச் சமாளிக்க, சுகாதார அமைச்சின் நான்கு பயிற்சி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளது

இத்துடன் நிலைமையை சரிசெய்ய மூன்று முக்கிய உத்திகளும் செயல்படுத்தப்படவுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுல்கெஃப்லி அகமத் அறிவித்துள்ளார்.

சபா பல்கலைக்கழகத்தில்  சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெற்ற பயிற்சி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது  அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

10,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள்

நாட்டின் சுகாதாரத் துறையில் அனுமதிக்கப்பட்ட 73,281 ‘U5’  நிலைப் பணி நியமனம் சார்ந்த தாதியர் பணியிடங்களில், தற்போது 10,557 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

அவ்வகையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, இப்பற்றாக்குறையை விரைவாகச் சீரமைக்க பற்பல சீர்திருத்தங்களை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

அதன்படி, கூடுதலானோருக்கு பயிற்சி அளித்து தாதியர் பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், குவாந்தான், கோலா, திரங்கானு, மூவார், பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள அமைச்சின் பயிற்சி நிலையக் கிளைகளை (ஐஎல்கேகேஎம்) அக்டோபர் 2027க்குள் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருதல், உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது. 

தாதியர் பயிற்சிகளுக்கான சேர்க்கை அளவை அதிகரிப்பதோடு, அவர்களின் திறன்களை மேம்படுத்தப் புதிய பணியிடப் பயிற்சித் திட்டங்களும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக, தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பயிற்சி முடிக்கும் பட்டதாரிகளுக்கு ஒப்பந்த நடைமுறைகள் எதுவுமின்றி நேரடியாக நிரந்தரப் பணி நியமனம் வழங்கப்படவுள்ளது.

அயல்நாடுகளில் நிலவும் வேலைவாய்ப்புகள், சிறந்த ஊதியம் காரணமாக மலேசியாவிலிருந்து பல தாதியர்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குப் புலம்பெயரும் சூழலில், உள்ளூர்ச் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள இந்த நேரடி நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
சுகாதாரம்மலேசியாதாதியர்அமைச்சு