ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடியில் கூடுலாக 26 மின்நுழைவாயில்கள் இம்மாதம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணிகள் நெரிசலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிதாகப் பொருத்தப்படும் மின்நுழைவாயில்கள் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று ஜோகூர் மாநிலத்தின் பொதுப் பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே தெரிவித்தார்.
புதிய மின்நுழைவாயில்களுடன் சேர்த்து மலேசியாவுக்குள் வருபவர்களுக்காக மொத்தம் 39 மின்நுழைவாயில்கள் இருக்கும் என்றும் மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்வோருக்காக 29 மின்நுழைவாயில்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
“புதிய மின்நுழைவாயில்கள் சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை, குடிநுழைவு, சோதனைச்சாவடியை அடைந்துவிட்டன. 26 புதிய மின்நுழைவாயில்கள் பொருத்தப்பட்டுவிட்டன. அவை தற்போது சோதிக்கப்படுகின்றன. அடுத்த இரு வாரங்களில் அவை செயல்படத் தொடங்கிவிடும்.
மலேசியாவுக்குள் வரும் பயணிகளுக்கான பகுதியில் புதிதாக 17 மின்நுழைவாயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகளுக்கான பகுதியில் ஒன்பது புதிய மின்நுழைவாயில்கள் பொருத்தப்பட்டுள்ளன,” என்று திரு முகம்மது ஃபஸ்லி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 6) பதிவிட்டார்.

