தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும்: இஸ்‌ரேல்

2 mins read
2d357760-d353-40ef-8630-ccd267df8aae
ஹவுதிப் போராளிகளுக்கு மிகவும் முக்கியமான ஹொடைடா துறைமுகம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: ஹவுதிப் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று துறைமுகங்களிலிருந்து வெளியேறுமாறு ஏமன் நாட்டவர்களுக்கு இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை (மே 11) எச்சரிக்கை விடுத்தது.

இஸ்‌ரேல் மீது ஹவுதிப் போராளிகள் பாய்ச்சிய ஏவுகணைகளுக்குப் பதிலடித் தாக்குதல்களை இஸ்ரேல் அண்மைய நாள்களில் நடத்தியது.

இந்நிலையில், ஹவுதிப் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

துறைமுகங்களை ஹவுதிப் போராளிகள் பயன்படுத்துவதால் அவ்விடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவ்விடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இஸ்‌ரேல் கூறியது.

இந்தத் தகலவை இஸ்‌ரேலிய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

மே 4ல் , ஹவுதிப் போராளிகள் பாய்ச்சிய ஏவுகணை இஸ்‌ரேலின் பிரதான விமான நிலையத்தின் வளாகத்தில் விழுந்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஹவுதிப் போராளிகளுக்கு மிகவும் முக்கியமான ஹொடைடா துறைமுகம் மீது இஸ்‌ரேல் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹவுதிப் போராளிகள் ஏமனிலிருந்து இஸ்‌ரேல் நோக்கி ஏவுகணை பாய்ச்சினர்.

அந்த ஏவுகணையை இஸ்‌ரேல் சுட்டு வீழ்த்தியது.

ஈரானிய ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹவுதிப் போராளிகளுக்குத் தக்க பாடம் புகட்டப்படும் என்று இஸ்‌ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்‌ரேல் கட்ஸ் சூளுரைத்தார்.

ஈரானிய ஏவுகணைகளை ஹவுதிப் போராளிகள் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

ஏமனின் பெரும் பகுதிகளை ஹவுதிப் போராளிகள் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

காஸா போர் தொடங்கியதிலிருந்து இஸ்‌ரேல் மீதும் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதிப் போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹவுதிப் போராளிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று ஹவுதிப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்