மலேசியப் போக்குவரத்து அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் கேமராக்கள்

மலேசியப் போக்குவரத்து அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் கேமராக்கள்

2 mins read
a1751017-7f25-43d5-9f41-30a084936e7b
தற்போது 100 உடைபொருத்து கேமராக்கள் மலேசிய போக்குவரத்து அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ளன. - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியாவின் போக்குவரத்துக் காவலர்களுக்கு உடையில் பொருத்திக்கொள்ளக்கூடிய மேலும் 300 முதல் 500 கேமராக்களை வழங்க சாலைப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இதனை அந்தத் துறையின் தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

மலேசியக் கூட்டரசு பிரதேச நாள் 2026ஐ ஒட்டி வாகனங்களுக்கான ‘எஃப்எச்’ (FH) என்னும் சிறப்புப் பதிவுத் தொடரின் தொடக்க நிகழ்வில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

போக்குவரத்து அமலாக்க நடவடிக்கையை நாடளாவிய அளவில் வலுப்படுத்தவும் போக்குவரத்துக் காவல் அதிகாரிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் கூடுதல் கேமராக்கள் வாங்க முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“களப் பணியில் ஈடுபடும் எங்கள் அதிகாரிகளுக்குக் கூடுதல் உடைபொருத்து கேமராக்களைப் பெற உள்ளோம்.

“அவற்றைக் கொள்முதல் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 300க்கும் 500க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் வாங்கப்படும்.

“கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமலாக்க அதிகாரிகளுக்கு 100 கேமராக்கள் வழங்கப்பட்டன. அவர்களிடமிருந்து சாதகமான கருத்துகள் பெறப்பட்டதைத் தொடர்ந்து அதனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

“இருப்பினும், அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு உடைபொருத்து கேமராவின் பயன்கள் குறித்து விரிவான அளவில் மதிப்பீடு செய்யப்படும்,” என்றார் திரு ரம்லி.

கேமராக்களின் பயன் ஆற்றல்மிக்கதாக உள்ளது என்று இதுவரை பெறப்பட்ட கருத்துகள் தெரிவிப்பதாகவும் அவர் சொன்னார்.

அதிகாரிகளுக்கு உடைபொருத்து கேமராக்கள் வழங்கும் திட்டம் குறித்து மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தார்.

அமலாக்க நடவடிக்கைகளின் ஆற்றலை மேம்படுத்தவும் பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 100 கேமராக்கள் சாலைப் போக்குவரத்துத் துறை தலைமையகத்திலும் மாநில அலுவலகங்களிலும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதற்காக 2.3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே, தொழில்நுட்பம் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருவதால், அதற்கிணங்க சாலைப் போக்குவரத்து அமலாக்கச் சட்டத்தை விரிவான முறையில் மின்னிலக்கப்படுத்தும் பணியில் சாலைப் போக்குவரத்துத் துறை துடிப்புடன் இயங்கி வருவதாக திரு ரம்லி கூறினார்.

குறிப்புச் சொற்கள்