மலேசியாவில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்

மலேசியாவில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள்

2 mins read
999fcb9f-9a07-4403-b4d3-cc57a86cf618
சாலை ஒன்றில் காணப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள். - படம் பிக்சாபே

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் எண்ணிக்கையில் துல்லியமாகப் படமெடுக்கும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

தலைநகர் கோலாலம்பூரில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

நிதி ஒதுக்கீடு

நாடு முழுவதும் உள்ளூர் மன்றங்களின் கட்டுப்பாட்டில் வரும் 15 பகுதிகளில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதற்காக ஐந்து மில்லியன் ரிங்கிட் (1.6 மில்லியன் வெள்ளி) மலேசிய வீடமைப்பு, உள்ளாட்சித்துறை அமைச்சர் கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

“கோலாலம்பூரையும் தாண்டி இதுபோன்ற திட்டங்களை அமைச்சு நாடு முழுவதும் இருக்கும் உள்ளாட்சித்துறைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்திவருகிறது.

“இந்த ஆண்டு மட்டும் 15 உள்ளாட்சித்துறைப் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த ஐந்து மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளோம். குளுவாங், ஜெம்போல், தைப்புங், தவாவ், கோலா சிலாங்கூர் ஆகியவை அப்பகுதிகளில் அடங்கும்,” என்று அவர் த ஸ்டார் ஊடகத்திடம் தெரிவித்தார்.

தமது அமைச்சு, அதன்கீழ் வரும் உள்ளாட்சித்துறைப் பிரிவின் மூலம் காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டு, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் குற்றங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாக திரு கா கூறினார்.

“முக அடையாள முறை உட்பட மேலும் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்,” என்றார் திரு கா.

இலக்கு

வாழ்வதற்கு உகந்த நகரை உருவாக்குவது மட்டுமின்றி தொடர்ந்து நேசிக்கப்படும் நகரை உருவாக்குவதே தமது அமைச்சின் கனவு என்று அவர் விவரித்தார். அத்தகைய நகரம் பாதுகாப்பானதாக இருப்பது மட்டுமின்றி அதன் உள்கட்டமைப்பு உயர்தரமிக்கதாகவும் இருக்கவேண்டும் என்றும் அது இசை, வரலாறு, கலாசாரம் ஆகியவற்றுக்குப் பிரபலமான இடமாக விளங்கவேண்டும் என்றும் திரு கா விளக்கினார்.

நகர்ப்புறச் சூழலில் பாதுகாப்பை உறுதிசெய்வதும் எங்கிருந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வகைசெய்வதுமே தமது கனவு என்றும் அவர் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்