பட்டர்வொர்த்: பினாங்கு பாகானில் ஒரு நவீன இந்து சுடுகாடு கட்டுவதற்காக, பினாங்கு மாநில இந்து அறக்கட்டளை வாரியத்திற்கு கூடுதலாக ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் ஒப்புதல் அளித்துள்ளார் என வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்துள்ளார்
இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், இத்திட்டத்திற்கான மொத்த நிதி, திரு அன்வாரால் முன்னர் ஒப்புதல் அளிக்கப்பட்ட 1.5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
குறிப்பாக செபராங் பிராய் பகுதியில் உள்ள இந்து சமூகத்திற்கு மிகவும் அவசியமான இத்திட்டத்தைச் செயல்படுத்த, முதலில் ஒதுக்கப்பட்ட 1.5 மில்லியன் ரிங்கிட் நிதி போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். பத்து லஞ்சாங்கில் உள்ள தகனச்சாலைக்குப் பிறகு, இது பினாங்கின் இரண்டாவது நவீன மின்சாரத் தகனச்சாலையாக அமையும்.
“மலேசியாவின் பல்லின, பல சமய சமூகங்களின் தேவைகளுக்கு நியாயமான கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்வதில், மடானி அரசாங்கம் மற்றும் பிரதமரின் அக்கறையையும் அர்ப்பணிப்பையும் இந்தக் கூடுதல் ஒப்புதல் பிரதிபலிக்கிறது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23) ஜாலான் சிராமில் உள்ள தகனச்சாலை கட்டப்படும் தளத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங், பாகான் டாலாம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதற்கிடையே, இந்துச் சமூகம் தங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் சமய நம்பிக்கைகளின்படி இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு, மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட, பொருத்தமான, வசதியான ஓர் இடத்தை வழங்குவதில் இந்தத் தகனச்சாலை முக்கியமானது என்று திரு குமரன் கூறினார்.
மேலும், இந்த வசதியானது, செபராங் பிராய் பகுதியில் உள்ள இந்துச் சமூகம், தொலைவில் அமைந்துள்ள தகனச்சாலை வசதிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் என்றும் அவர் கூறினார்.
“இது இந்துச் சமூகத்தின், குறிப்பாக செபராங் பிராய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நன்மைக்கான ஒரு நீண்டகால வசதியாகும்,” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தை இன்னும் விரிவாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் நிதி கோரி பிரதமர் அன்வாருக்குக் கடிதம் எழுதிய திரு லிம், திரு ராயரின் கூட்டு விண்ணப்பம் மற்றும் முயற்சிகளின் விளைவாகவே இந்தக் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று குமரன் கூறினார்.
சுமார் 4,000 சதுர அடி பரப்பளவுள்ள தகனச்சாலை கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளி செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டது.


