அனைத்து தொகுதிகளுக்கும் கூடுதலாக ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி: அன்வார் இப்ராகிம்

அனைத்து தொகுதிகளுக்கும் கூடுதலாக ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி: அன்வார் இப்ராகிம்

1 mins read
f993d943-5bf3-43d2-a9fd-9f261322c59c
2026 பிகேஆர் தேசிய மாநாட்டில் பங்கேற்ற மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மலாக்கா: மலேசியாவின் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக ஒரு மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

அந்த நிதி நேரடியாக மக்களைச் சென்றடையும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள், வெள்ளத்தால் அவதியுறும் சமூகங்கள் உட்பட உதவி தேவைப்படுவோர்க்கு வளர்ச்சி நிதி சென்றுசேர்வதைத் தமது அரசாங்கம் உறுதிசெய்து வருவதாகக் கூறிய அவர், அம்முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெற்ற 2026 பிகேஆர் தேசிய மாநாட்டில் நிறைவுரை ஆற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஒருபோதும் குறைக்கப்படவில்லை என்ற பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக அரசாங்கம் ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது என்றும் சொன்னார்.

அரசியல் காரணங்களைவிட மக்களின் தேவைகளின் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் அமைய வேண்டும் என்று திரு அன்வார் சுட்டிக்காட்டினார்.

அதற்குச் சான்றாக, மடானி நிர்வாகத்தின்கீழ் கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வலையொளிகளில் வரும் தனிப்பட்ட விமர்சனங்களாலோ தாக்குதல்களாலோ தமது கவனம் சிதறாது என்றும் அரசாங்கம் தனது பணியில் மட்டுமே கவனம் செலுத்தும் என்றும் பிரதமர் உறுதியாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்நாடாளுமன்றத் தொகுதிநிதி