கோலாலம்பூர் விமான நிலையத்தில் நவீனச் சோதனை முறை

2 mins read
70cb8809-5608-4832-bdb0-07a9a86492d7
மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய சோதனை நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) பயணிகளைச் சோதிக்கும் முறை ஆண்டிறுதிக்குள் மேம்படுத்தப்படவிருக்கிறது.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைவோரைத் தடுக்கும் நோக்கத்துடன் நவீனச் சோதனை முறைகள் அறிமுகம் காணும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது அதுகுறித்துக் கூடுதல் விவரங்களை அவர் தந்தார்.

மலேசியாவில் இயங்கும் 56 விமான நிறுவனங்களில் முதலில் 10ல் புதிய சோதனை முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று திரு சைஃபுதின் கூறினார். நவீனச் சோதனை முறைகளின்படி பயணிகள் வருவதற்கு முன்பே அவர்களின் தனிப்பட்ட விவரங்களைக் குடிநுழைவு அதிகாரிகள் அணுக அனுமதி அளிக்கப்படும். ஃப்ரீ மலேசியா டுடே (Free Malaysia Today) அதனைத் தெரிவித்தது.

“பயணிகள் நுழையும்போதும் வெளியேறும்போதும் சோதிக்கப்படும் முறை முழுமையாக மின்னிலக்கமயமாக்கப்படும். பயணிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு சோதிக்கும் நடவடிக்கைகள் தானியக்கக் கதவுகளைப் பயன்படுத்துவதால் குறைந்துவிடும்,” என்றார் திரு சைஃபுதின்.

மின்னிலக்க வசதிகளுடன் கூடிய குடிநுழைவுச் சேவை தவறு நடப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் குறைக்கும் என்று அவர் சொன்னார்.

மலேசியாவுக்குள் நுழைவதற்கான 123 வாயில்களில் 635 தானியக்கக் கதவுகள் பொருத்தப்படவிருக்கின்றன.

முதற்கட்டம் இவ்வாண்டு டிசம்பர் மாதம் முக்கிய இடங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கேஎல்ஐஏ முதலாம், இரண்டாம் முனையங்கள், கூச்சிங், கோத்தா கினபாலு, பினாங்கு அனைத்துலக விமான நிலையங்கள், ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம், சுல்தான் அபுபக்கர் வளாகம் முதலியவை அவற்றுள் அடங்கும்.

முக அங்கீகாரம், கருவிழிப்படலச் சோதனை, கைரேகைகள் போன்ற அங்க அடையாளத் தரவுகளைத் தானியக்கக் கதவுகள் பயன்படுத்தும் என்று அமைச்சர் சைஃபுதின் சொன்னார். சோதனைக் கட்டமைப்பில் சிக்கல் ஏற்படுத்தும் சாத்தியங்களைக் குறைப்பது அதன் நோக்கம் என்றார் அவர்.

சில நுழைவாயில்களில் குடிநுழைவு அதிகாரிகள், உடைகளில் கேமராக்களை அணிந்துகொண்டு செயல்படும் முறையையும் உள்துறை அமைச்சு சோதிக்கிறது.

அதிகாரிகள் தவறாக நடந்துகொள்வதைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளில் புதிய நடவடிக்கைகளும் அடங்கும் என்றார் திரு சைஃபுதின்.

குடிநுழைவுக் கூடங்களில் முறையாகச் சோதிக்காமல் சிலரை மலேசியாவுக்கு அனுமதித்த சதித்திட்டம் தொடர்பில் 26 அதிகாரிகள் சென்ற ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

“நேர்மையாக நடந்துகொள்ளாதவர்களுக்கு உள்துறை அமைச்சில் இடமில்லை. அத்தகைய தவறுகளை அறவே ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார் அமைச்சர் சைஃபுதின்.

குறிப்புச் சொற்கள்