இருநாட்டுப் பயணிகளுக்கு சொகுசு மிகுந்த போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதில் சிங்கப்பூரும் ஜோகூரும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளன.
அதன்மூலம், நீடித்து நிலைக்கக்கூடிய வட்டாரப் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூருக்கு வருகை தந்த அவர், சிங்கப்பூரின் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரத்துவ சிங்கப்பூர் வருகையின் மூன்றாம் நாளில், எல்லை தாண்டிய போக்குவரத்துப் பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாகவும் ஜோகூர் முதல்வர் கூறியுள்ளார்.
ஜோகூர்-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், “அந்தத் திட்டத்தின் செயல்வடிவ முன்னேற்றம் குறித்து நானும் சிங்கப்பூர் அமைச்சரும் பேசினோம்,” என்றார்.
அதுமட்டுமின்றி, திட்டத்தின் கால அட்டவணை குறித்தும் அதிவிரைவுப் பயணக் கட்டணம் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாகக் கூறிய முதல்வர், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைப்பது ஆலோசனையில் முக்கிய இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டுப் போக்குவரத்துத் தொடர்பு குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக திரு காஸி குறிப்பிட்டுள்ளார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட், காஸ்வே லிங்க், எஸ்எம்ஆர்டி பேருந்துகள், டிரான்ஸ்டார் டிராவல், பஸ் ஏசி7 ஆகிய ஐந்து பெரிய போக்குவரத்து நிறுவனங்களின் இருநாட்டுப் பேருந்துப் பயணத்தை அதிகரிக்கலாம் என்றும் தற்போது அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் பேருந்துச் சேவையை இன்னும் முன்னதாகத் தொடங்கலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு செய்வதன்மூலம் கடற்பாலத்திலும் குடிநுழைவு நிலையங்களிலும் கூட்ட நெரிசலைச் சமாளிக்கவும் சுமுகமான பயணத்தை மேற்கொள்ளவும் முடியும் என்பது யோசனைகளின் நோக்கம் என்றார் அவர்.
மலேசியாவின் புக்கிட் சாகார் நிலையத்தையும் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் இணைக்கும் நான்கு கிலோமீட்டர் ரயில் பாதையின் கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு இறுதிவாக்கில் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர்-சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் பயணச் சேவையை 2027 ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த ரயில் பாதைத் திட்டத்தின்கீழ், புக்கிட் சாகார் குடிநுழைவு, சுங்கச்சாவடி, தடைக்காப்பு வளாகக் கட்டமைப்புக்கான (ICQC) பணிகள் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 28) நிறைவுபெற்றதாக மலேசியாவின் ‘எம்ஆர்டி கார்ப்’ கூறியிருந்தது.