கோலாலம்பூர்: இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் தங்களுடைய பாதுகாப்புக்காக, அங்குள்ள மலேசியத் தூதரகங்களுடன் தொடர்புகொண்டு முழுமையான தகவல்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை தாண்டிய தாக்குதலால் மலேசியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.
அங்குள்ள மலேசியர்கள், குறிப்பாக மாணவர்கள் காஷ்மீர் போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுவரை எந்தவொரு மலேசியரும் பாதிக்கப்படவில்லை என்றார் அவர்.
சனிக்கிழமை சிரம்பானில் தேசிய பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பான அண்மைய நிலவரங்களை வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அமைச்சர் முஹமட் ஹசான் தெரிவித்தார்.
“டிரோன், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவது தவிர்க்க வேண்டியது, தற்போது நிலவும் சூழ்நிலை கவலையளிக்கிறது. இரு நாட்டின் தலைவர்களும் நாட்டைப் பாதிக்கும் செயல்களை விடுத்து நன்மைபயக்கும் பரந்த கண்ணோட்டத்தில் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

