அறிவார்ந்த பேருந்துக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்த ஆலோசனை: சிலாங்கூர்

அறிவார்ந்த பேருந்துக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்த ஆலோசனை: சிலாங்கூர்

2 mins read
15689cd4-7cc6-4813-a30b-aa3635b77f2a
சிலாங்கூரில் அறிவார்ந்த பேருந்துகளுக்கு ஹைட்ரஜனைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

‌‌ஷா ஆலம்: சிலாங்கூர் அரசாங்கம் இவ்வாண்டு இறுதிக்குள் அதன் அறிவார்ந்த பேருந்துச் சேவைக்கு ஹைட்ரஜன் எரிசக்தியைப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துவருகிறது.

இயற்கை எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கும் ஒரு முயற்சியாக சிலாங்கூர் அரசாங்கம் ஹைட்ரஜனைப் பயன்படுத்த முற்படுகிறது.

மாநிலத்தின் இயற்கை எரிசக்திக் கட்டமைப்பின் தயார்நிலையைப் பொறுத்து அறிவார்ந்த பேருந்துகளுக்கு ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என்றார் மாநில முதலீட்டு, வர்த்தக, நடமாட்டக் குழுத் தலைவர் இங் சு ஹான்.

ஹைட்ரஜன் உற்பத்திக்கான செலவு அதிகம் என்பதால் அறிவார்ந்த பேருந்துகளுக்கு மிகவும் கவனமாகத் திட்டமிடவேண்டும் என்று திரு இங் கூறினார்.

மின்பகுப்பான், மின்னூட்டக் கட்டமைப்புகள் போன்ற வசதிகளுக்கான தேவைகளையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அமர்வின்போது அறிவார்ந்த பேருந்துகள் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விக்குத் திரு இங் பதிலளித்தார்.

சிலாங்கூரில் தற்போது 1,090 மின்னூட்ட நிலையங்கள் செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ‌‌‌ஷா ஆலமில் ஆக அதிக நிலையங்கள் இருப்பதைச் சுட்டினார்.

‌‌‌ஷா ஆலமில் 226 மின்னூட்ட நிலையங்களும் காஜாங்கில் 221 நிலையங்களும் செபாங்கில் 182 நிலையங்களும் செயல்படுவதாகத் திரு இங் சொன்னார்.

“மின்னூட்ட வாகனங்களின் பயன்பாட்டை ஆதரிக்க சிலாங்கூர் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. உள்ளூர் அதிகாரிகள் மூலம் புதிதாக அமைக்கப்படும் வட்டாரங்களில் மின்னூட்ட வசதிகள் அமைக்கப்படுவதைக் கட்டாயமாக்கியிருப்பது அவற்றுள் ஒன்று,” எனத் திரு இங் விளக்கம் அளித்தார்.

உள்ளூர் அதிகாரிகளும் மின்னூட்ட வசதிகளை எதிர்காலத்தில் பொருத்துவதற்கான உகந்த இடங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2030ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரில் 4,000 மின்னூட்ட வசதிகளை நிறுவ மாநில அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஹைட்ரஜன்எரிசக்திசிலாங்கூர்