கோலாலம்பூர்: சிங்கப்பூர்-மலேசியா இடையே சொகுசுப் பேருந்துச் சேவைகளை வழங்கி வரும் ஏரோலைன் நிறுவனம், கோலாலம்பூருக்கான தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கான பேருந்துச் சேவையை அது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள், சிக்கலான வணிகச் சூழல் ஆகியவை காரணமாகவே இந்தக் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று (மே 30) வெளியிடப்பட்ட நிறுவனத்தின் ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு எப்போது முதல் அமலுக்கு வரும் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பயணத் தேவை அதிகமாக இருக்கும் ஜூன் மாதப் பள்ளி விடுமுறைக் காலத்தின் தொடக்கத்திலேயே இது வெளியாகியுள்ளது.
முன்னதாக, கோரஸ் கேஎல்சிசி பகுதியில் இயங்கி வந்த ஏரோலைன், தற்காலிகமாக டிஆர்எக்ஸ் வணிக வளாகத்துக்குத் தனது சேவைகளை மாற்றியிருந்தது.
ஆனால், மலேசிய நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவுப்படி, மே 27ஆம் தேதி முதல் டிஆர்எக்ஸ் வணிக வளாகத்தில் பயணிகளை ஏற்றவோ இறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டது.
உரிமம் பெற்ற முனையங்களிலிருந்து மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்ததே இதற்குக் காரணமாகும். தற்போதைய விதிமுறைகளின்படி, இந்நிறுவனம் 1 உத்தாமா, லாலாபோர்ட் போன்ற உரிமம் பெற்ற முனையங்களில் மட்டுமே இயங்க முடியும்.
ஆனால், அத்தகைய முனையங்களுக்குச் சேவைகளை மாற்றுவது இயக்கச் செலவுகளைப் பேரளவில் அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதனால், பிரத்தியேக ஓய்வறைகள், தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவை மற்றும் இலவச சிற்றுண்டிகள் ஆகியவற்றுடன் தாங்கள் வழங்கி வரும் உயர்தரப் பயண அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
வணிகக் கட்டண உயர்வு மற்றும் கூடுதல் ஊழியர்களின் தேவை போன்ற காரணங்களால், பயணக் கட்டணத்தை பேரளவில் உயர்த்த வேண்டியிருக்கும் அல்லது சேவையின் தரத்தைக் குறைக்க வேண்டியிருக்கும் என்று ஏரோலைன் விளக்கமளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் நன்மதிப்பை விட்டுக்கொடுத்து, கட்டணத்தை உயர்த்தியோ அல்லது குறைபாடான சேவைத் தரத்துடனோ இயங்குவதற்குப் பதிலாக, கோலாலம்பூரிலிருந்து முற்றிலும் வெளியேறி, மற்ற இடங்களுக்கான சேவைகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளோம்,” என்று ஏரோலைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் நகரத்துக்கு வெளியே உள்ள ஏரோலைனின் பிற பேருந்து அட்டவணைகள், பயணச்சீட்டு ஏற்பாடுகள் மற்றும் தொடர் சேவைகள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ ஊடகங்கள் வழியாகப் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

