காபூல்: ஆஃப்கானிய ஆடவர் ஒருவர் தன் வயது 140 என்று கூறுவது குறித்து விசாரிப்பதாக அந்நாட்டுத் தலிபான் அரசாங்கம் கூறியுள்ளது.
இந்தத் தகவல் நிரூபிக்கப்பட்டால் அவர் உலகில் தற்போது உயிர்வாழும் ஆக வயதான மனிதர் என்ற சிறப்பைப் பெறுவார்.
ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள ‘கோஸ்ட்’ வட்டார மலைப்பகுதியில் வசிக்கும் அகில் நஸிர், தான் 1880களில் பிறந்ததாகக் கூறுகிறார்.
1919ஆம் ஆண்டு, ஆங்கிலோ-ஆஃப்கானியப் போர் முடிவுற்றதை அப்போதைய மன்னர் அமானுல்லா கானுடன் அவரது அரண்மனையில் கொண்டாடியதாக அவர் சொல்கிறார்.
“ஆங்கிலேயர்கள் தோற்றுப் பின்வாங்கியதாகக் கூறப்பட்டது எனக்கு நினைவிலிருக்கிறது. ஆங்கிலேயரைத் துரத்தியதற்காக அனைவரும் மகிழ்ச்சியுடன் மன்னர் அமானுல்லா கானுக்கு நன்றி கூறினோம். அன்றைய கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் இப்போது உயிருடன் இல்லை,” என்றார் நஸிர்.
நஸிரின் வயதை நிரூபிக்க உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் அவரது உண்மையான வயதை மதிப்பிடும் நோக்கில் தலிபான் நிர்வாகம் குடிமைப் பதிவுக் குழு ஒன்றைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.