காபுல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 2021ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, வேலைகளை இழந்த பல பெண்கள் ரகசியத் தொழில்களை நடத்தி வருகின்றனர்.
உடற்பயிற்சிக் கூடம், அழகுப் பராமரிப்பு நிலையங்கள், பெண்கள் பள்ளிகள் போன்ற தொழில்களை அவர்கள் நடத்துகின்றனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான் நிர்வாகம் ஈராண்டுகள் ஆட்சியில் இருப்பதைக் குறிக்கிறது. பெண்கள் பெரும்பாலான வேலைகள் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உயர்நிலை, மேல்நிலைக் கல்வி கற்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதன் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இருப்பினும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளிலிருந்தே சிறு தொழில்நிறுவனங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இருபது ஆண்டுகளாகப் பெண்களுக்குப் பொருளியல் வாய்ப்புகளை அதிகரிக்க, அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், தலிபான் ஆட்சியைக் கைப்பற்றியதும் வீண்போயின. நன்கொடையாளர்கள் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கில் பணம் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

