காபூல்: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் படைகளுக்கிடையே எல்லையில் மோதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காபூலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் படைகள் மீதான தாக்குதல் தொடர்வதாக ஆப்கானிஸ்தான் தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது.
நூர் கான் விமானப் படைத் தளம் உட்பட பாகிஸ்தானின் முக்கிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதேநேரத்தில், எல்லைப் பகுதிகளிலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் முழு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி உள்ளதுடன் இரு நாடுகள் இடையே எல்லைப் பிரச்சினையும் தீவிரமாகி வருகிறது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மீது நேரடிப் போர் தொடுப்பதாகக் கடந்த மாதம் 27ஆம் தேதி பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அப்போதுமுதல் இரு நாடுகளுக்கும் இடையே அதி தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு களை வீசி வருகின்றன.
இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
சண்டையில் குழந்தைகள் பலியானது குறித்து ஐநா குழந்தைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளதுடன், அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துப் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

