புத்ராஜெயா: ஒரு குடியிருப்புப் பகுதியில் தனது இரண்டு இளைய உடன்பிறப்புகளுடன் காரை ஓட்டிய 12 வயது சிறுவனின் பெற்றோர் மீது இப்போது சாலைப் போக்குவரத்துப் பிரிவு (ஜேபிஜே) நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
அச்சிறுவன் காரை ஓட்டிச் சென்ற காணொளி சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டதன் எதிரொலியாக, காவல்துறைக்குப் பிறகு இப்போது சாலைப் போக்குவரத்துப் பிரிவும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று ஜேபிஜே-யின் தலைமை இயக்குநர் ஏய்டி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.
இருப்பினும், தனது பிரிவு தனது சொந்த விசாரணையை நடத்தும் என்று குறிப்பிட்ட திரு ஏய்டி, தங்கள் புலனாய்வில் உதவுமாறு அச்சிறுவனின் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
“காவல்துறை தனது புலனாய்வை முடிக்கும் வரை காத்திருப்போம். அதன் பிறகு, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன்படி, சாலைப் போக்குவரத்துப் பிரிவு இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்,” என்று திரு ஏய்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு பெண் தலையிட்டு ‘பெரோடுவா விவா’ ரக காரை நிறுத்துமாறு கட்டளையிடுவதற்கு முன், அந்த கார் ஒரு வீட்டின் முன் உள்ள வேகக் கட்டுப்பாட்டு மேட்டின் மீது வேகமாகச் செல்வதைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து இச்சம்பவம் பொதுமக்களின் பேசுப்பொருளாக உருவாகியது.
அச்சிறுவனின் தந்தையிடமிருந்து காவல்துறை ஒரு விளக்க அறிக்கையைப் பெற்றுள்ளது என்று செப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோஃப் ஜூலை 30ஆம் தேதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 39(1)ன் கீழ் விசாரிக்கப்படுகிறது. அச்சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டக்கூடாது.
உரிமம் இன்றி தனது மகன் காரை ஓட்டுவதற்கு அனுமதித்த அந்தப் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறிய திரு ஏய்டி, அவருக்கு ஆலோசனையும் வழங்கப்படும் என்றும் சொன்னார்.
உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்களை ஓட்டுவதற்கு சிறார்களை அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோர்கள் அது குறித்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
“உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளை எச்சரிப்பது பெற்றோரின் கடமையும் பொறுப்பும் ஆகும். சில பிள்ளைகள் வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்காது,” என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியதாக பெர்னாமா செய்தி தெரிவித்தது.

