தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் நில அதிர்வுகள் தொடரக்கூடும்: மலேசிய வானிலை ஆய்வு மையம்

2 mins read
1b8cb9eb-d978-4971-ad92-741cd9a01320
ஜோகூர், சிகாமட்டில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை 6.13 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறைந்தபட்சம் ஐந்து நில அதிர்வுகளைச் சந்தித்துள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

பெட்டாலிங் ஜெயா: பழமையான மெர்சிங் நில அதிர்வு பிளவுக்கோடு வழியாகப் புவியின் ஆற்றல் முழுமையாக வெளியேறும் வரை, ஜோகூரில் நில அதிர்வுகள் தொடரக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அண்மையில் தெற்கு ஜோகூரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள், இன்னும் சமநிலையை எட்டாத மேற்கண்ட நில அதிர்வு பிளவுக்கோட்டினால் ஏற்பட்டிருக்கலாம் என்று மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் முகமது ஹிஷாம் முகமது அனிப் கூறினார்.

“சிகாமட், மெர்சிங்கிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், நில அதிர்வு பிளவுக்கோடு புவியின் அடியில் தொடர்ந்து இணைக்கப்பட்டு, புவி ஓட்டில் வலுவற்ற பகுதியாகச் செயல்படுவதாக நம்பப்படுகிறது,” என்றார் அவர்.

ஜோகூர், சிகாமட்டில் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதிகாலை 6.13 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 27 (3.2), ஆகஸ்ட் 28 (2.5), ஆகஸ்ட் 29 (3.4), ஆகஸ்ட் 30 (2.7) ஆகிய தேதிகளில் குறைந்தபட்சம் ஐந்து நில அதிர்வுகளைச் சந்தித்துள்ளது.

தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் பெரும்பாலான நில அதிர்வுகள், பொதுவாக இந்தோனீசியாவின் சுமத்ராவில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் விளைவாகும் என்று டாக்டர் ஹிஷாம் கூறினார்.

மேலும், தீபகற்ப மலேசியாவில் ஏற்படும் பெரும்பாலான நிலநடுக்கங்கள் 5.0 ரிக்டர் அளவைத் தாண்டாது என்றும், பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்து மிகக் குறைவு என்றும் அவர் கூறினார்.

சூழலைத் தொடர்ந்து கண்காணித்து, அவ்வப்போது தகவல்களை வெளியிடுவதற்கு மெட்மலேசியா உறுதியுடன் உள்ளது என்று டாக்டர் ஹிஷாம் உறுதியளித்தார்.

“ஜோகூரில் ஏற்பட்ட நில அதிர்வுகள் பலவீனமானவை. அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்