புத்ரஜெயா: மலேசிய அரசாங்கம் வழங்கும் பல்வேறு ஆவணங்களைக் கொண்டு சமூக ஊடகத் தளங்கள், பயனீட்டாளரின் வயது வரம்பைச் சரிபார்க்க அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டின் துணைத் தொடர்பு அமைச்சர் டியோ நீ சிங் கூறியுள்ளார்.
ஆனால், மைடிஜிட்டல் அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“சமூக ஊடகத் தளங்கள் பயனீட்டாளரின் வயதைச் சரிபார்க்க மைகாட்ஸ், கடப்பிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், மைடிஜிட்டல் அடையாளத்தைப் பயன்படுத்தும்போது தனிப்பட்ட விவகாரங்கள் வெளியிடப்படாது,” என்றார் திருவாட்டி டியோ.
வயது வரம்பைச் சரிபார்ப்பதற்கான தகவலை மட்டும் மைடிஜிட்டல் அடையாள முறை சமூக ஊடகத் தளங்களுக்கு வழங்கும் என்றார் அவர்.
பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மைடிஜிட்டல் அடையாளத்துக்குப் பதிலாகக் கடப்பிதழ்களையும் அடையாள அட்டைகளையும் பயன்படுத்த விரும்புவதாகத் திருவாட்டி டியோ தெரிவித்தார்.
அதுகுறித்துப் பேசிய அவர், வயது வரம்பைச் சரிபார்க்க அரசாங்க ஆவணங்களைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இல்லை என்றார்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மலேசியாவில் ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 16 வயதுக்குக்கீழ் உள்ளோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணைய அச்சுறுத்தல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.

