சோல்: நல்ல உணவு பழக்கங்களின் மூலம் ஒருவரின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் கவனம் செலுத்தும் வாழ்க்கை முறையையே மூப்படைதலை மெதுவடையச் செய்யும் வாழ்க்கை முறை (slow ageing) எனக் கூறுகின்றனர்.
அதைப் பின்பற்றுவதின் மூலம் மன அழுத்தமும் உடல் பருமனும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகளையும் சர்க்கரை அளவு அதிகமுள்ள உணவு பொருள்களையும் தவிர்ப்பதையே அந்த உணவுமுறை வலியுறுத்துகிறது.
அண்மையில், இந்த உணவுமுறை தென்கொரிய இளையர்களிடையே பரவலாகி வருகிறது. சமூக ஊடகங்கள் மூலம் பரவத் தொடங்கிய இது அந்நாட்டின் ஒரு குறிப்பிட்ட தலைமுறையையே ஆட்டிபடைக்கும் இயக்கமாக மாறியுள்ளதாகக் கூறப்பட்டது.
தென்கொரியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 58,000 பேர், தாங்கள் பின்பற்றும் மூப்படைதலை மெதுவடையச் செய்யும் உணவு முறையை எக்ஸ் தளத்தின் மூலம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.


