வனுவாட்டுவில் வெளிநாட்டு ராணுவத் தளம் அமைக்கத் தடைவிதிக்கும் உடன்பாடு

வனுவாட்டுவில் வெளிநாட்டு ராணுவத் தளம் அமைக்கத் தடைவிதிக்கும் உடன்பாடு

2 mins read
e06388ed-b596-4143-8a18-7f21ec0e880a
கான்பெரா நாடாளுமன்றத்தில் உடன்பாட்டில் கையெழுத்திட்டதைக் காட்டும் வனுவாட்டுப் பிரதமர் ஜோதம் நபாத் (இடது), ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ். - படம்: ராய்ட்டர்ஸ்

கான்பெரா: பசிபிக் தீவான வனுவாட்டுவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத் தளத்தையும் நிறுவுவதைத் தடுக்கும் வகையிலான விரிவான பொருளியல், பாதுகாப்பு உடன்பாட்டில் ஆஸ்திரேலியாவும் வனுவாட்டுவும் திங்கட்கிழமை (ஜூன் 29) கையெழுத்திட்டன.

தென் பசிபிக்கில் சீனா, அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கு இடையே நிலவிவரும் உத்திபூர்வப் போட்டிக்கு மத்தியில் வனுவாட்டு மையமாகத் திகழ்கிறது. அந்த வட்டாரத்தில் சீனா ராணுவத் தளத்தை அமைக்க முற்படுவது குறித்து ஆஸ்திரேலியா கவலை தெரிவித்திருந்தது.

சீனாவைத் தனது முதன்மைக் கடன் வழங்குநராகக் கொண்டுள்ள வனுவாட்டுவிற்கு, இந்த உடன்பாட்டின் மூலம் A$500 மில்லியன் (S$446.42 மில்லியன்) நிதியுதவி வழங்க ஆஸ்திரேலியா உறுதியளித்துள்ளது. அதே வேளையில், எந்தவொரு வெளிநாட்டு ராணுவ சக்தியும் அங்குத் தளம் அமைப்பதையும் இது தடுக்கிறது.

ஏஎஃப்பி செய்தி நிறுவனம் பார்வையிட்ட அந்த உடன்பாட்டு ஆவணத்தில், “வனுவாட்டு தனது எல்லைப் பகுதியை எந்தவொரு வெளிநாட்டு ராணுவத் தளத்திற்கோ உள்கட்டமைப்பிற்கோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வனுவாட்டு அதன் துறைமுகங்கள், மின்னிலக்க, விமானப் போக்குவரத்து, எரிசக்தி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆஸ்திரேலியா உதவும். பதிலுக்கு, அத்தகைய உள்கட்டமைப்புகள் வெளிநாட்டுத் தலையீடுகள் அல்லது ராணுவமயமாக்கலில் இருந்து விடுபட்டிருப்பதை உறுதிசெய்ய வனுவாட்டு ஒப்புக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை வனுவாட்டுவின் நீண்டகால முதன்மைக் காவல் பங்காளியாக இந்த உடன்பாடு அங்கீகரிக்கிறது. அத்துடன், இதர உதவிகளுக்கு பசிபிக் தீவுகள் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கே வனுவாட்டு முன்னுரிமை அளிக்கும்.

சீனா 2023ல் வனுவாட்டுவுடன் காவல்துறைத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதுடன், அந்நாட்டுக் காவல்துறைக்கு வானூர்திகள், சுற்றுக்காவல் கப்பல்கள், வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை நன்கொடையாக வழங்கியிருந்தது.

தற்போதைய உடன்பாட்டின்படி, ஆஸ்திரேலியாவும் வனுவாட்டுவும் தங்களுக்குள் காவல்துறைப் பயிற்சி, உபகரணங்கள், கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தங்களது உதவிகளை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லவுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சீனாவின் விரிவடைந்துவரும் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பசிபிக் தீவு நாடுகளுடன் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து மேற்கொண்டுவரும் தொடர் உடன்பாடுகளின் வரிசையில் இந்த உடன்பாடு அமைகிறது.

குறிப்புச் சொற்கள்