ஹனோய்: உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இணையக் குற்றங்களை எதிர்கொள்ள வியட்னாமியத் தலைநகர் ஹனோயில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடப்படுகிறது.
இது ஐநாவின் முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் ஏறத்தாழ 60 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இணையக் குற்றங்கள் காரணமாக உலகளாவிய பொருளியலுக்கு ஆண்டுதோறும் பேரளவில் இழப்பு ஏற்படுகிறது.
இணையக்குற்றத்துக்கு எதிரான தடையற்ற அனைத்துலக ஒத்துழைப்புக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதன் மூலம் மனித உரிமை மீறப்படக்கூடும் என்று மனித உரிமை ஆர்வலர்களுடன் தொழில்நுட்ப நிறுவனங்களும் கடுமையாக விமர்சித்துள்ளன.
இணையக் கட்டமைப்புகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன என்று சோதனை செய்யும் வகையில் அவற்றை ஊடுருவப் பார்ப்பவர்கள் பாதிப்படையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஒப்பந்தம் வாயிலாக இவர்கள் தொடர்பான தரவுகள் அரசாங்கங்களிடையே பகிர்ந்துகொள்ளப்படக்கூடும் என்றும் அவ்வாறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, “இணையத்தில் பல குற்றச் செயல்கள் நிகழ்கின்றன. புது வகையான மோசடிகள் குடும்பங்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. உலகளாவிய பொருளியலைப் பொறுத்தவரை இது பேரிழப்பை ஏற்படுத்துகின்றன,” என்று ஐநா தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இணையக் குற்றங்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் சக்திவாய்ந்த கருவியாகத் திகழும் என்றார் அவர்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் இணையக் குற்றங்களை எதிர்கொள்ள உலகளாவிய சட்டப்பூர்வக் கருவி ஒன்று அறிமுகமாவதுடன் பன்முகச்சார்பியத்தின் வீரியம் உறுதி செய்யப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை போன்றவற்றை நிலைநாட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன,” என்று வியட்னாமிய அதிபர் லுவோங் குவோங் கூறினார்.

