பெட்டாலிங் ஜெயா: கிட்டத்தட்ட 1,000 போலி எக்ஸ் தள கணக்குகளும் போலி செய்தி இணையத்தளம் ஒன்றும் சம்பந்தப்பட்ட தேர்தல் குறுக்கீட்டு நடவடிக்கை மலேசியாவில் தேர்தல் முறையின் நம்பகத்தன்மைக்கு மிரட்டலாக இருக்கும் ஒன்று என அந்நாட்டின் எம்சிஏ கட்சியின் இளையர் தகவல் பிரிவுத் தலைவரும் தேசிய முன்னணிக் கூட்டணியின் இயக்குநருமான நியாவ் சூ சியோங் கூறியுள்ளார்.
அந்நடவடிக்கைக்குத் தாங்கள் இடையூறு விளைவித்ததாக ஆந்திரோபிக் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அச்சுறுத்தல்
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்ட அவர், மலேசியாவின் 16வது பொதுத் தேர்தலை முன்னிட்டு செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியோடு எடுக்கப்பட்ட அந்நடவடிக்கை பாதுகாப்பு அச்சுறுத்தலை எழுப்புவதாக எச்சரித்தார்.
“இது சாதாரண இணையம் சார்ந்த பிரச்சினையல்ல. மலேசியாவின் தேர்தல் முறைக்கு நேரடி மிரட்டலாகும்,” என்று திரு நியாவ் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) அறிக்கை முலம் தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவால் இப்போது பலரின் அடையாளங்களையும் அந்தந்த சூழலையும் போலியாக உருவாக்குவதோடு பொதுமக்களின் கருத்துகளில் தலையிட்டு மாற்றவும் முடியும். முன்பு செய்ய முடியாத அளவில் இவற்றைச் செய்ய முடிகிறது.
“16வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் பல கேள்விகளுக்கு விடைகள் தேவைப்படுகின்றன,” என்றார் அவர்.
அரசாங்கத்துக்கு வேண்டுகோள்
அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது, யார் இதற்குப் பின்னால் இருக்கிறார், ஏன் அதிகாரிகளுக்குப் பதிலாக தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று அந்நடவடிக்கையை அடையாளம் கண்டது போன்ற கேள்விகளை அவர் முன்வைத்தார். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாடு எந்த அளவு தயாராய் இருக்கிறது என்பதற்கான தெளிவான விவரங்களை மலேசியத் தொடர்புகள், பல்லூடக ஆணையமும் (எம்சிஎம்சி) தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபாட்சில்லும் மலேசியர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்றும் திரு நியாவ் கேட்டுக்கொண்டார்.
ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முழுமையான விதிமுறைக் கட்டமைப்பு, அமலாக்க முறைகள் நடப்பில் இருக்கவேண்டும் என்பதற்கும் அவர் குரல் கொடுத்தார்.
“தேர்தல் முறையில் வர்த்தக அணுகுமுறை சார்ந்த குறுக்கீட்டு முயற்சிகளுக்கு எதிராகத் தற்போது நடப்பில் இருக்கும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள், பதில் நடவடிக்கைகள் ஆகியவற்றை அரசாங்கம் பொதுமக்களிடம் விவரிக்கவேண்டும்,” என்று திரு நியாவ் விளக்கினார்.

