கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய ரயில் கட்டமைப்புப் பகுதியில் கம்பிவடத் திருட்டுகளைத் தடுப்பதற்காக, இவ்வாண்டின் நான்காம் காலாண்டுக்குள் 1,146 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
ரயில் சேவைகளைப் பாதிப்பதோடு பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்திருட்டுகளைத் தடுக்க மலேசிய அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மலேசியப் போக்குவரத்து துணையமைச்சர் ஹஸ்பி ஹபிபுல்லா, 14 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான இத்திட்டத்தில் ஏற்கெனவே 247 கேமராக்கள் பொருத்தப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ளவை அதிக ஆபத்துள்ள பகுதிகள் மற்றும் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இத்தொழில்நுட்பம் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களை உடனுக்குடன் கண்டறிய உதவும். இத்துடன், சுற்றுக்காவல் பணிகளைத் தீவிரப்படுத்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் காவல்துறையினருக்கு 20 ‘ஸ்கிராம்ப்ளர்’ ரக மோட்டார் சைக்கிள்க பயன்படுத்தப்படவுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 16.3 மில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்திய 393 கம்பிவடத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தச் சட்டவிரோதச் செயல்களை ரயில்வே உள்கட்டமைப்புக்கு எதிரான நாசவேலையாகக் கருதும் அரசாங்கம், இதற்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவது குறித்து சட்டங்களை மறுஆய்வு செய்து வருகிறது.

