உலகைக் கவ்வியுள்ள செயற்கை நுண்ணறிவு மோகத்தால் நுண் சில்லுகளுக்குத் (memory chips) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனால் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்சாரப் பொருள் நிறுவனங்கள் குறைந்துவரும் சில்லுகளைப் பெறும் ‘போட்டி’யில் ஈடுபட்டு வருகின்றன.
சாதனங்கள் தகவல் தரவுகளைச் சேகரிக்க அத்தகைய சில்லுகள் அவசியமானவை. அதனால், அவற்றின் விலை இப்போது பெரிய அளவில் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மின்சாரப் பொருள் கடைகள், வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய ‘ஹார்ட் டிஸ்க்’ தகவல் சேகரிப்புச் சாதனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வருகின்றன. விலை உயர்வு குறித்து சீனாவின் திறன்பேசி உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.
மைக்ரான், சாம்சுங் இலெக்டிரானிக்ஸ், எஸ்கே ஹைனிக்ஸ் (SK Hynix) போன்ற சில்லு தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அவற்றை வாங்க மைக்ரோசாஃப்ட், கூகல், பைட்டான்ஸ் போன்ற மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ‘போட்டி’யிட்டு வருவதாகத் தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலைமை, கிட்டத்தட்ட எல்லா வகையான சில்லுகளுக்கும் பொருந்தும். யுஎஸ்பி தரவுத் தளங்கள், திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகள் ஆகியவற்றிலிருந்து தரவு நிலையங்களில் (data centres) பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட சில்லுகள் வரை அவற்றில் அடங்கும்.
சில துறைகளில் விலை, கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து இரு மடங்குக்கும் மேல் கூடியுள்ளதாக சந்தை ஆய்வு நடத்தும் நிறுவனமான டிரெண்ட்ஃபோர்ஸ் (TrendForce) தெரிவித்தது.
இந்த நெருக்கடி தொழில்நுட்பத் துறைகளையும் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில்லு தட்டுப்பாடு காரணமாகச் செயற்கை நுண்ணறிவைச் சார்ந்த உற்பத்தித் திறன் மெதுவடையக்கூடும் என்றும் மின்னிலக்கக் கட்டமைப்பில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பாடுகளைச் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும் என்றும் பொருளியல் வல்லுநர்களும் நிர்வாகத்தினரும் எச்சரிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், பல பொருளியல்கள் விலை உயர்வையும் அமெரிக்க வரிவிதிப்பையும் கையாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் பணவீக்கம் தொடர்பான சவால்கள் எழக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 40 பேருடன் நேர்காணல் நடத்தி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு இத்தகவலை வெளியிட்டுள்ளது. சில்லு தயாரிப்பு நிறுவனங்கள், விநியோக நிறுவனங்களைச் சேர்ந்த 17 நிர்வாகப் பிரிவினரும் அவர்களில் அடங்குவர்.
அதிநவீன சில்லுகளுக்கான பெரிய அளவிலான தேவையை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

