தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய அரசியல் தலைவர்களைக் குறிவைத்து ‘ஏஐ’ பாலியல் காணொளிகள்

2 mins read
c953788d-18b6-441b-a252-757726a1e796
மலேசியக் காவல்துறை தலைவர் இஸ்மாயில், ‘ஏஐ’ பாலியல் காணொளிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகளைக் குறிவைத்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் தயாரிக்கப்பட்ட பாலியல் காணொளிகள் வெளியாகியுள்ளன.

போலியான அக்காணொளிகளை வைத்து அரசியல் தலைவர்கள் மிரட்டவும் படுகின்றனர். அவர்களிடம் பெரும் தொகை கேட்டும் மோசடியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மலேசியக் காவல்துறை தலைவர் முகம்மது இஸ்மாயில், ‘ஏஐ’ பாலியல் காணொளிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

‘ஏஐ’ பாலியல் காணொளிகள் தொடர்பாக அதிகாரத்துவமாக இதுவரை நான்கு புகார்கள் மட்டுமே வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இணைய மிரட்டல் தொடர்பாகப் பத்துப் புகார்கள் வந்துள்ளன, அவற்றின் நான்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது விசாரணை நடந்து வருகிறது. விசாரணை தொடர்பான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்போம்,” என்று இஸ்மாயில் கூறினார்.

“இந்தக் காணொளிகளுக்குப் பின்னால் உள்ள நோக்கம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் பணத்திற்காகச் செய்பவர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவின் முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிசி ரம்லியும் ‘ஏஐ’ பாலியல் காணொளிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மோசடிக் கும்பல் உருவாக்கிய அந்த ஏஐ காணொளியில் திரு ரம்லி மற்றோர் ஆடவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதுபோல் இருந்தது. அக்காணொளியை வைத்து அக்கும்பல் திரு ரம்லியை 100,000 அமெரிக்க டாலர் பணம் கேட்டும் மிரட்டியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் வாயிலாக அந்தக் காணொளி அனுப்பப்பட்டது.

சுபாங் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென்னுக்கும் இதே போன்ற மிரட்டல் வந்துள்ளது.

தகவல் தொடர்பு அமைச்சர், இளையர், விளையாட்டு அமைச்சின் துணை அமைச்சர் உள்ளிட்ட 10 அரசியல் தலைவர்கள் ‘ஏஐ’ பாலியல் காணொளிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்