மருத்துவ ஆய்வில் ஏஐ: ஆஸ்ட்ராஸெனக்கா - இன்சிட்ரோ புதிய கூட்டணி

மருத்துவ ஆய்வில் ஏஐ: ஆஸ்ட்ராஸெனக்கா - இன்சிட்ரோ புதிய கூட்டணி

படம்: ஹெல்த்

15 Oct 2026 - 8:36 pm

1 mins read

லண்டன்: எளிதில் குணப்படுத்த முடியாத கல்லீரல், இதய நோய்களுக்கான புதிய சிகிச்சைகளைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான ‘இன்சிட்ரோ’ வுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகப் பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஸெனக்கா வியாழக்கிழமை (அக்டோபர் 15) அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆஸ்ட்ராஸெனக்கா நிறுவனம் 40 மில்லியன் அமெரிக்க டாலரை முதற்கட்டமாக வழங்கும். அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட இன்சிட்ரோ நிறுவனம், எதிர்காலத்தில் வளர்ச்சி, வணிக இலக்குகளின் அடிப்படையில் $1.46 பில்லியன் வரை பெறத் தகுதி பெறும். மேலும், எதிர்கால விற்பனையில் குறிப்பிட்ட விழுக்காடு காப்புரிமைத் தொகையும் அதற்கு வழங்கப்படும்.

பல ஆண்டுகள் நீடிக்கும் இந்தப் பங்காளித்துவம், கடுமையான கல்லீரல் நோயான வளர்சிதை மாற்றச் செயலிழப்பு தொடர்புடைய கல்லீரல் அழற்சி, இதயத் தசை பாதிப்பு நோய்களுக்கான தீர்வுகளில் கவனம் செலுத்தும். இவ்விரு நோய்களுக்கும் மூலக் காரணங்களைக் கண்டறிவதில் நிலவும் சவால்களால், பயனுள்ள சிகிச்சைகள் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் கூறப்பட்டது.

இன்சிட்ரோ நிறுவனம் தனது ‘வெர்ச்சுவல் ஹியூமன்’ எனும் ஏஐ தளத்தைப் பயன்படுத்தி, நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து ஆய்வுகளை மேம்படுத்தும். ஆஸ்ட்ராஸெனக்கா மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி நிதியளிக்கும்.

இன்சிட்ரோ நிறுவனம் ஏற்கெனவே பிரிஸ்டல் மையர்ஸ் ஸ்கிப், எலி லில்லி போன்ற முன்னணி மருந்து நிறுவனங்களுடனும் இத்தகைய பங்காளித்துவத்தை அமைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்