கோலாலம்பூர்: மேம்பட்ட வீடுகளை வடிவமைப்பது முதல் வாழத்தகுந்த நகரங்களை உருவாக்குவது வரை, கட்டடக் கலைஞர்கள், கட்டுமான நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட புத்தாக்கத்தின் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்றுக்கொள்வதால், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மலேசியாவின் கட்டமைப்புச் சூழலை மறுவடிவமைக்கத் தயாராக உள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை செயற்கை நுண்ணறிவு நாடாக மாற்றும் அரசாங்கத்தின் லட்சியத்திற்கு இணங்க, வடிவமைப்புப் பணிகளின் பல்வேறு அம்சங்களில் கட்டடக் கலைஞர்கள், அரசு ஊழியர்களால் செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக வீடமைப்பு, ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு இனி ஒரு தொலைநோக்குப் பார்வை அல்ல. அது இப்போது நமது லட்சியத்தின் ஒரு பகுதியாகிவிட்டது,” என்று வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெற்ற ஆசியான் சொத்துச் சந்தை மாநாடு 2026, ஆர்க்கிடெக்ஸ் 2026 ஆகியவற்றைத் தொடங்கி வைத்த பிறகு அவர் தெரிவித்தார்.
கட்டடக்கலை நிபுணர்களும் அரசு ஊழியர்களும் ஏற்கெனவே தங்கள் பணிகளில் செயற்கை நுண்ணறிவை இணைக்கத் தொடங்கியுள்ளதாகவும் இந்தத் தொழில்நுட்பம் படிப்படியாகத் தொழில்துறையின் அன்றாடச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மாறி வருவதாகவும் திரு ங்கா கூறினார்.
“நாங்கள் உண்மையில் அதைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம்,” என்று கூறிய அவர், மலேசியா தனது இறையாண்மை வாய்ந்த செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வளர்த்துக்கொண்டு, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவுடன் இணைந்து செயல்படுவதால், செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்வதற்குச் சிறந்த நிலையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“மலேசியாவுக்கு மிகுந்த ஆற்றல் உள்ளது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
தனது உரையில், வீடுகள் வெறும் தங்குமிடம் வழங்குவதையும் தாண்டிப் பரிணமித்துள்ளன என்றும் இன்றைய இல்லங்கள் மக்கள் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், கற்பதற்கும், சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்குமான இடங்களாகச் செயல்படுகின்றன என்றும் அமைச்சர் ங்கா கூறினார்.

