கோலாலம்பூர்: மலேசியாவின் படைப்பாக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, ஓவியர்கள், படைப்பாளர்களின் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
வரைகலை ஓவியராகப் பணியில் சேர்ந்த மலேசிய இளையர் ஒருவர், ஓவியம் வரைவதற்குப் பதிலாக ‘ஏஐ’ தளங்களில் கட்டளைகளைப் பதிவிடும் ‘ப்ராம்ப்ட் எடிட்டராக’ மாற்றப்பட்ட தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துகொண்டது சமூக ஊடகங்களில் பரவியது.
ஜூன் 2026ல் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ள பல்லூடகம், விளம்பரம், சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் பட்டதாரிகளின் வேலை இழப்பு விகிதம் 78 விழுக்காடுவரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக, 25 முதல் 34 வயதிற்குட்பட்ட இளையர்கள் அதிகளவில் வேலை இழக்கும் ஆபத்தைச் சந்திக்கின்றனர். அரசாங்கத் தரவுகளின்படி, 2022 முதல் 2025 வரை படைப்பாக்கத் துறையில் ஏறக்குறைய 1,000 ஊழியர்கள் 1,087 முறை வேலைகளை இழந்துள்ளனர். இதில் சிலர் அதிக முறை வேலை இழக்க நேரிட்டது.
அரசாங்கத் துறைகளின் தகவல், படப் பதிவுகள் முதல் செய்தி வாசிப்பாளர்கள், தேர்தல் பிரசாரங்கள் வரை ‘ஏஐ’ பயன்பாடு விரிவடைந்துள்ளதால், மலேசியக் குரல் கலைஞர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் வேலைவாய்ப்புகள் 30 விழுக்காடுவரை சரிந்துள்ளன.
குறிப்பாக ஆங்கிலம், சீன மொழிப் பேசுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலாய் மொழியின் வட்டார வழக்குகளைப் புரிந்துகொள்வதில் ‘ஏஐ’ இன்னும் தடுமாறுவதால் அவர்கள் தற்காலிகமாகப் தப்பித்துள்ளனர்.
மலேசிய மனிதவள அமைச்சு ஆகஸ்ட் 2025ல் மேற்கொண்ட ஆய்வின்படி, விண்வெளி, மின்னணு உற்பத்தி, ஆற்றல், உணவு, தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, சில்லறை விற்பனை போன்ற முக்கியத் துறைகளில் பணிபுரியும் 620,000 பேர் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மனிதக் கலைஞர்களின் தோற்றம், குரலைப் பிரதிபலிக்கும் ‘மின்னிலக்க இரட்டையர்’ (Digital Twin) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் புதிய வழிகளும் உருவாகி வருகின்றன.
அது கலையின் உண்மையான தன்மையைச் சீர்குலைப்பதாகப் பிரபல நடிகர் ரெட்ஸா மின்ஹாட் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக, பிரதமர் அன்வர் இப்ராகிமின் ‘மின்னிலக்க இரட்டையர்’ அரட்டைத் தளம் தவறான பதில்களை அளித்ததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

