‘ஏஐ’ அன்றாட வாழ்வில் பலன்தரும்: கருத்தாய்வில் மலேசியர்கள் நம்பிக்கை

‘ஏஐ’ அன்றாட வாழ்வில் பலன்தரும்: கருத்தாய்வில் மலேசியர்கள் நம்பிக்கை

2 mins read
7ec4c208-04aa-4be8-9a25-10d4b7f79ffc
வேலையிடத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததாக மலேசியர்களில் 82 விழுக்காட்டினர் கருத்தாய்வில் கூறியிருந்தனர். உலகச் சராசரியான 62 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். - படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்தும் அன்றாட வாழ்க்கையில் அதன் அனுகூலங்கள் பற்றியும் மலேசியர்கள் பரந்த அடிப்படையில் நம்பிக்கையுடன் இருப்பது புதிய கருத்தாய்வொன்றில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் வேலைச் சந்தையையும் பொருளியலையும் மேம்படுத்த ‘ஏஐ’ தொழில்நுட்பம் கைகொடுக்குமா என்பதில் அவர்கள் அவ்வளவு நம்பிக்கையுடன் இல்லை என்றும் அது குறிப்பிட்டது.

கருத்தாய்வை ‘இப்சோஸ்’ நிறுவனம் மேற்கொண்டது. ‘இப்சோஸ் ஏஐ மோனிட்டர் 2026’ எனும் அது இவ்வாண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதிக்கும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கும் இடையில் இணையத்தளத்தில் நடத்தப்பட்டது. அதில் 32 நாடுகளைச் சேர்ந்த 23,532 பேர் பங்கெடுத்தனர். மலேசியாவில், 18க்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட 500 பேரிடம் ‘இப்சோஸ்’ கருத்தாய்வை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு வேலையிடத்தில் ‘ஏஐ’ தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததாக மலேசியர்களில் 82 விழுக்காட்டினர் கூறியிருந்தனர். உலகச் சராசரியான 62 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.

“மக்களிடையே ‘ஏஐ’ தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தைப் பொறுத்தவரை சீனா முதலிடத்தில் உள்ளது. மலேசியர்களும் ஆசியாவின் மற்றப் பகுதிகளைப் போன்றே ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல்மீது தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கின்றனர்,” என்று கருத்தாய்வு குறிப்பிட்டது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ‘ஏஐ’ கருவிகளாலும் சேவைகளாலும் தீமைகளைவிட நன்மைகளே அதிகம் என்று மலேசியர்களில் 70 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

சீனாவின் 85 விழுக்காட்டைக் காட்டிலும் அந்த விகிதம் குறைவு. ஆனால் உலகச் சராசரியான 55 விழுக்காட்டைவிட அது அதிகம். மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அந்த விகிதம் முறையே 44 விழுக்காடாகவும் 38 விழுக்காடாகவும் இருந்தது.

மலேசியர்களில் 70 விழுக்காட்டினர், ஏஐ கருவிகளும் சேவைகளும் உற்சாகமூட்டுவதாகத் தெரிவித்தனர்.

உலகச் சராசரியான 51 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். சீனாவில் அந்த விகிதம் 83 விழுக்காடு. மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அது முறையே 38 விழுக்காடாகவும் 33 விழுக்காடாகவும் இருந்தது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வேலை செய்யும் முறையை ‘ஏஐ’ மாற்றக்கூடும் என்று 84 விழுக்காட்டு மலேசியர்கள் கருத்தாய்வில் தெரிவித்திருந்தனர். அதுவும் உலகளாவிய சராசரியான 62 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் என்று கருத்தாய்வு காட்டியது.

குறிப்புச் சொற்கள்