ஊழியர்களின் தரவுகளைக் கொண்டு ‘ஏஐ’ பணியாளர்; இணையவாசிகள் அதிருப்தி

ஊழியர்களின் தரவுகளைக் கொண்டு ‘ஏஐ’ பணியாளர்; இணையவாசிகள் அதிருப்தி

2 mins read
ab0be4c8-3567-4431-9c98-d72ebbd7a3f0
ஊழியர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் ஒரே மாதிரியான வேலைகளை ஏஐ கட்டமைப்புகள் எளிதாகவும் வேகமாகவும் கற்றுக்கொள்ளக்கூடும். - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீனாவின் ஷாண்டோங் மாநிலத்தில் உள்ள ஓர் இணைய விளையாட்டு நிறுவனம், தனது முன்னாள் ஊழியர் ஒருவரின் உரையாடல் பதிவுகள் (chat logs), முடிவெடுக்கும் பழக்கம் உள்ளிட்டவற்றைக் கொண்டு ‘ஏஐ அவதார்’ எனப்படும் நிகழ்நேர மெய்நிகர்ப் பிரதிநிதிக்குப் பயிற்சி வழங்கியுள்ளது.

நிகழ்நேர மெய்நிகர்ப் பிரதிநிதி அந்த முன்னாள் ஊழியரின் வேலையைக் கிட்டத்தட்ட செய்து முடிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இருப்பினும் இந்த நடவடிக்கை குறித்து இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

ஊழியர்களின் தரவுகளைச் சேகரித்து இத்தகைய மின்னிலக்க நகல்களை உருவாக்கும் நிறுவனங்களின் இந்தப் புதிய போக்கு வேகமாக வளர்ந்து வருவதை இந்தச் சர்ச்சைக்குரிய செயல் எடுத்துக்காட்டுகிறது என்று இணையவாசிகள் சாடுகின்றனர்.

அதேபோல் இந்தப் புதிய நடவடிக்கை வேலைப் பாதுகாப்பு குறித்த ஆழமான கவலைகளையும் எழுப்பியுள்ளது.

ஊழியர்கள் திரும்பத் திரும்பச் செய்யும் ஒரே மாதிரியான வேலைகளை ஏஐ கட்டமைப்புகள் எளிதாகவும் வேகமாகவும் கற்றுக்கொள்ளக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்படும் தகவல்களை ஏஐ பின்பற்றுவதால் அது ஒரு மனிதனைப்போலச் சிந்திக்க முடியும் என்றும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

‘ஏஐ’யிடம் பேரளவுத் தொழில்நுட்பக் கணினி ஆற்றலும் அறிவும் இருந்தாலும், அதற்கு மனிதர்களின் கட்டளைகள் தேவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

மற்றவர்களுடன் கலந்துரையாடி வேலை செய்யும் மனிதப் பணியாளர்களை, குறிப்பாக உணர்வுபூர்வமான மதிப்பைக் கொடுக்கும் வேலைகளில் இருப்போர்க்கு ‘ஏஐ’ பொருத்தமான மாற்றாக அமைய முடியாது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் இந்தத் திறனையும் அது விரைவில் கற்றுக்கொள்ளக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்