கோலாலம்பூர்: மலேசியா, அதன் விமானப் போக்குவரத்துத் துறையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்ட தாக்கத்தைச் சமாளிக்க விமான நிறுவனங்கள் சிரமப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவற்றின் நிதிச்சுமையைக் குறைக்க எண்ணியிருக்கிறது மலேசியா.
கட்டணங்களில் சில சலுகைகளை மலேசியப் போக்குரவத்து அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கான அவகாசத்தை 60 நாள் வரை நீட்டிக்க அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
விமானங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை விலக்குவது, பயணிகள் ஏறும் பாலம், பயணப்பதிவுக் கூடம் முதலியவற்றுக்கான கட்டணங்களை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது போன்ற சலுகைகளும் வழங்கப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
தீபகற்ப மலேசியாவுக்கும் சபா, சரவாக், மத்திய வட்டாரமான லபுவான் ஆகியவற்றுக்கும் இடையே பயணம் செய்வோருக்கு விமானக் கட்டணத்தில் தள்ளுபடி தரப்படும். அதன்மூலம் 100,000 மலேசியர்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம், அதற்காக 5 மில்லியன் ரிங்கிட்டை ($1.6 மில்லியன்) ஒதுக்கியுள்ளது. அந்தத் தள்ளுபடித் திட்டம், இம்மாதம் (மே) முதல் ஜூன் வரை நடப்பில் இருக்கும்.
ஈரான் போரின் காரணமாக அதிகரித்த விமான எரிபொருள் விலையால் விமானப் போக்குவரத்துத் துறை நிலைகுலைந்துள்ளது. எரிபொருள் விலை, பீப்பாய்க்கு 85 முதல் 90 அமெரிக்க டாலரிலிருந்து 150 முதல் 200 அமெரிக்க டாலராகக் கூடியுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறையில் செயல்பாட்டுச் செலவுகளில் கால் பகுதி வரை எரிபொருளுக்குச் செல்கிறது. அதனால், விமான நிறுவனங்கள் அதிகம் சிரமப்படுகின்றன.

