மலாயா பல்கலைக் கழகத்தின் சார்புநிலை பேராசிரியராக ஏர் ஏஷியா டோனி ஃபெர்னாண்டஸ் நியமனம்

1 mins read
86606847-4482-4f8e-ba90-753d14eedc48
நட்டத்தில் இருந்த ஏர்ஏஷியா நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக கொண்டு வந்த பெருமை டோனி ஃபெர்னாண்டசுக்கு உள்ளது. - கோப்புப் படம்: இணையம்

கோலாலம்பூர்: ஆசியாவின் பிரபல தொழிலதிபரும் ஏர்ஏஷியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டோனி ஃபெர்னாண்டஸ், மலாயா பல்கலைக் கழகத்தின் சார்புநிலை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்துத் துறையிலும் வர்த்தக தலைமைத்துவத்திலும் டோனி ஃபெர்னாண்டசுக்கு உள்ள அபரிதமான அனுபவம் மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் பல்கலைக் கழகத்துக்கும் விலைமதிப்பற்ற நுண்ணறிவையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று அறிக்கை வாயிலாக மலாயா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர் டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

ஏர்ஏஷியா நிறுவனத்தை ஆசியாவின் ஆகப் பெரிய வெற்றிகரமான விமான நிறுவனமாக மாற்றிய பெருமை டோனி ஃபெர்னாண்டசுக்கு உள்ளது.

“அவரது தலைமையின்கீழ் ஏர்ஏஷியா நமது நாட்டின் முக்கிய நிறுவனமாக உருவெடுத்து இவ்வட்டார விமான போக்குவரத்து துறையில் புரட்சி செய்துள்ளது,” என்று திரு நூர் அசுவான் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடனான பங்காளித்துவத்தை தொடர்ந்து வலுப்படுத்தி, நாட்டின் எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கவும் நாட்டை முன்னணிக்கு எடுத்துச் செல்லவும் உலகளாவிய மேம்பாட்டுக்கும் மலாயா பல்கலைக் கழகம் கூட்டாக பங்களிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சார்பு நிலை பேராசிரியர் என்ற நிலையில் டோனி ஃபெர்னாண்டஸ், விரிவுரை, பயிலரங்கு, கருத்தரங்கு போன்றவற்றை நடத்துவதோடு தேசிய, அனைத்துலக நிறுவனங்களுடனான பங்காளித்துவத்துக்கு உதவி செய்வார்.

சார்புநிலை பேராசிரியர்கள் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றுவார்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்