கசபிளாங்கா: வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் கசாபிளாங்காவிலிருந்து கனடாவின் மான்ட்ரியல் நகருக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) புறப்படவிருந்த ஏர் கனடா விமானச் [Ϟ]சேவை ரத்து செய்யப்பட்டது.
ஆத்திரமடைந்த விமானப் பணியாளர் ஒருவர், பயணியிடம் கத்தியதே இதற்குக் காரணம். இதனால் விமானச் சேவை ஞாயிற்றுக்கிழமை வரை தாமதமானதாக தி நியூயார்க் போஸ்ட் செய்தி தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் பரவலான காணொளி ஒன்று, பயணி ஒருவரிடம் ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் கத்துவதைக் காட்டியது.
“நீ ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டும், இல்லாவிட்டால் நாம் இங்கிருந்து வெளியேறிவிடுவோம்! என் பணியாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்வதை நான் சகித்துக்கொள்ள மாட்டேன்!” என அப்பணியாளர் உரக்கக் கூறுவதைக் கேட்க முடிந்தது.
பயணி ஒருவர் போர்வை கேட்டதாலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதை ஏர் கனடா உறுதிப்படுத்தியது. பின்னர், வேறு பணியாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை விமானம் மான்ட்ரியலுக்குப் புறப்பட்டது.
விமானச் சேவை தாமதத்தால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
“இச்சம்பவத்தை நாங்கள் கடுமையானதாகக் கருதுகிறோம். இதன் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஏர் கனடா பேச்சாளர் ஒருவர் கூறினார்.