தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடுவானில் கதவைத் திறக்க முயன்ற பயணி; விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கம்

1 mins read
1f227fb7-7a1a-4fab-875a-fad22bb66d01
விமானத்தின் கதவைத் திறக்க முயன்றவர்மீது காவல்துறை வழக்கு பதியவில்லை. - மாதிரிப்படம்: ஊடகம்

லண்டன்: விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் அவசரகால வெளியேற்றக் கதவைத் திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்துத் தலைநகர் லண்டனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 22) பிற்பகல் கனடாவின் டொரோன்டோ நகருக்குக் கிளம்பிய ஏர் கனடா விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அவ்விமானத்தில் பயணம் செய்த ஒருவர், விமானப் பயணம் முழுவதும் சக பயணி ஒருவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன என்று கூறியதாக ‘சிட்டி நியூஸ்’ செய்தி தெரிவித்தது.

நடுவானில் அந்த முதிய பயணி விமானத்தின் கதவைத் திறக்க முற்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவ்விமானம் பிற்பகல் 3 மணியளவில் டொரோன்டோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்திலிருந்த மற்றப் பயணிகள் அனைவரும் இறங்கியதும், காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் நுழைந்து அந்தக் குறிப்பிட்ட பயணியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஏதோ நெருக்கடியிலும் மனக்குழப்பத்திலும் இருந்ததையும் வேண்டுமென்றே அவர் விமானத்தின் கதவைத் திறக்க முயலவில்லை எனத் தெரிந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

அம்முதியவர்மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்