இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள மியன்வாலி விமானப்படைப் பயிற்சித்தளம்மீது சனிக்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர்.
ஆனால், பயிற்சித்தளத்திற்குள் நுழையும் முன்னரே பயங்கரவாதிகள் ஒன்பது பேரைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். .
“ராணுவத்தினரின் விரைந்த, ஆற்றல்மிக்க செயல்பாட்டினால் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு, படையினர் மற்றும் பிற பணியாளர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது,” என்று பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்தது.
பயங்கரவாதத் தாக்குதலின்போது, அந்தப் பயிற்சித்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று விமானங்களும் எரிபொருள் வாகனம் ஒன்றும் சேதமடைந்ததாக அவ்வறிக்கை குறிப்பிட்டது. அம்மூன்று விமானங்களும் ஏற்கெனவே செயல்பாட்டிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
தெஹ்ரீக் இ ஜிகாத் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கிலுள்ள பலுசிஸ்தானில் இருக்கும் ராணுவத் தளத்தில் கடந்த ஜூலை மாதம் 12 வீரர்களின் உயிரைப் பறித்த தாக்குதல் உட்பட பல தாக்குதல்களுக்கு அவ்வமைப்பே காரணம் எனக் கூறப்பட்டது.
இதனிடையே, சனிக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கு எதுவும் உயிருடற்சேதம் ஏற்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.