ஏர் இந்தியா 2026ஆண்டுக்கான நிதியாண்டில் $2.8 பில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ) வெளியிட்ட அதன் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.
டாட்டா குழுமம், ஏர் இந்தியாவை 2022ஆம் ஆண்டு ஏற்று நடத்தத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்டுள்ள ஆக அதிக அளவிலான நஷ்டம் இது.
இதன் காரணமாக ஏர் இந்தியா, தற்காலிகமாக பல அனைத்துலக விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளது. சிங்கப்பூருக்கும் இந்திய நகரங்களுக்கும் இடையிலான சேவைகள் உட்பட, சில பாதைகளுக்கான சேவைகளைக் குறைத்துள்ளது.
எரிபொருளின் விலை உயர்வாலும், ஆகாயப் பயணங்களுக்கான வான்வழி தடைகளாலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏர் இந்தியாவுடன் தொடர்வோம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
எனினும், ஏர் இந்தியா நிறுவனத்தில் 25.1 விழுக்காடு முதலீட்டுப் பங்கு வகிக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடர்ந்து அந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படப்போவதை உறுதிப்படுத்தியது.
அதன் நெடுநாள் உத்திபூர்வ இலக்குகளின் அடிப்படையில் அதன் முதலீடுகளை கருத்தில்கொண்டு, ஏர் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது முக்கியமானது என்று எஸ்ஐஏ விளக்கியது.
“இந்த உத்திபூர்வ முதலீடு, உலகின் மிகப் பெரிய, அதிவேகமாக வளரும் விமானப் பயணச் சந்தைகளில் அங்கம் வகிக்கும் நிறுவனம் ஒன்றுடன் நேரடிப் பங்கு வகிக்கும் வாய்ப்பை எஸ்ஐஏ குழுமத்துக்கு வழங்கி, அதன் எதிர்கால வளர்ச்சியை வலுப்படுத்துகிறது,” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தை உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்றும் நீண்டகாலத் திட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்ஐஏ தொடர்ந்து பணியாற்றும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் வெள்ளிக்கிழமை (மே 15 நடைபெற்ற ஆண்டு ஆண்டு நிதிநிலைக்கூட்டத்தில் தெரிவித்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் மறுசீரமைப்பு என்பது ஒரு “நீண்ட காலப் பயணம்” என்றும், அதற்கு குறுக்கு வழி எதுவுமில்லை என்றும் அவர் கூறினார்.
டாடா குழுமத்துடனான இந்த உறவு நீண்ட கால நோக்கம் கொண்டது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவின் இரண்டாம் ஆகப்பெரிய விமான நிறுவனம் ஏர் இந்தியா.

