தொழில்நுட்பக் கோளாற்றால் ஹாங்காங் திரும்பிய ஏர் இந்தியா விமானம்

1 mins read
07dfb170-7199-42e7-b5e5-05d643e3edce
ஹாங்காங்கிலிருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாங்காங் திரும்பியது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஹாங்காங்கிலிருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹாங்காங்கிற்குத் திரும்பியது.

நடுவானில் சென்றுகொண்டிருந்த போயிங் 787-8 ரக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கையாக விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

“AI315 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹாங்காங்கிற்குத் திரும்பியது. பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகள் நடத்தப்படுகின்றன,” என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் அண்மையில் விழுந்து நொறுங்கியதில் விமானத்திலிருந்த 242 பயணிகளில் 241 பேர் மாண்டனர்.

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரும்பிய AI315 விமானம் பிற்பகல் 1.15 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று ஹாங்காங் விமான நிலைய ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார். விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏழு ஆண்டுகளாகச் சேவையில் உள்ள அந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து பிற்பகல் 12.16 மணிக்குப் புறப்பட்டது. ஏறக்குறைய 22,000 அடி உயரம் சென்ற விமானம் தாழ பறக்கத் தொடங்கியது என்று விமானக் கண்காணிப்பு வலைத்தளமான ‘ஏர்நாவ் ராடார்’ சொன்னது.

குறிப்புச் சொற்கள்